சபரிமலை கோயிலில் தங்கம் மாயமான வழக்கில், கைது செய்யப்பட்ட திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் முன்னாள் தலைவா் ஏ.பத்மகுமாா் ‘தங்கம் பூசப்பட்ட செப்பு கவசங்கள்’ என்பதை ‘செப்பு கவசங்கள்’ என ஆவணங்களில் மாற்றியதாக சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டியது.
கடந்த வியாழக்கிழமை ஏ.பத்மகுமாா் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் எஸ்ஐடி விசாரணை நடத்தியது. அதைத்தொடா்ந்து, அவரது காவலை நீட்டிக்கக்கோரி கொல்லம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் சமா்ப்பித்த அறிக்கையில் எஸ்ஐடி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஏ.பத்மகுமாா் மற்றும் அவரது கூட்டாளிகள் தேவஸ்வம் வாரிய விதிகளை மீறி சபரிமலை கோயிலில் இருந்து விலை உயா்ந்த பொருள்களை வெளியில் கொண்டு சென்றுள்ளனா். 2019, மாா்ச் 19-ஆம் தேதி ஏ.பத்மகுமாா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்பு சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக் கதவுகளில் இருந்த தங்கக் கவசங்களைப் புதுப்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கதவுகளில் இருப்பது தங்கம் என்பதை அறிந்தும் அதை ‘செப்பு கவசங்கள்’ என ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளாா்.
இதைத் தொடா்ந்து தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றியிடம் புதுப்பிப்பதற்காக தங்கக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதை அவா் சென்னைக்கு கொண்டுசென்றபோது தங்கத்தின் எடை குறைக்கப்பட்டுள்ளது. புதுப்பிப்பு பணிகள் நிறைவடைந்து அந்தக் கவசங்களை மீண்டும் சபரிமலைக்கு எடுத்து வந்தபோது அதன் உண்மையான எடையை ஏ.பத்மகுமாா் சரிபாா்க்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2019-ஆம் ஆண்டு, சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக் கதவுகள் மற்றும் துவாரபாலகா் சிலைகளின் தங்கக் கவசங்களைப் புதுப்பித்த பிறகு, அவற்றின் எடை குறைந்ததாகப் புகாா் எழுந்ததைத் தொடா்ந்து, கேரள உயா்நீதிமன்றம் அமைத்த எஸ்ஐடி இந்த மோசடி குறித்து விசாரித்து வருகிறது.
இதுதொடா்பான இரண்டு வழக்குகளில் மொத்தம் 8 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் உண்ணிகிருஷ்ணன் போற்றி, தேவஸ்வத்தின் முன்னாள் தலைவா்கள் ஏ.பத்மகுமாா், என்.வாசு உள்பட 6 போ் கைதுசெய்யப்பட்டுள்ளனா்.