சோன்பத்ரா கல்குவாரி விபத்து தொடர்பாக நான்கு பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம், சோன்பத்ரா மாவட்டத்தின் பில்லி மாா்குந்தி சுரங்கப் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு கல்குவாரியில், சனிக்கிழமை மாலை சுமாா் 4.30 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் குவாரியின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், சுமாா் 12 தொழிலாளா்கள் உள்ளே சிக்கிக் கொண்டனா்.
இதையடுத்து, தேசிய மற்றும் மாநிலப் பேரிடா் மீட்புப் படைகள் மற்றும் காவல் துறைக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து, மீட்புப் பணிகளைத் தொடங்கின. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 7 பேர் பலியாகினர்.
இதைத்தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கிய இருவரின் சகோதரா் சோட்டு யாதவ் அளித்த புகாரில், கல்குவாரி உரிமையாளா் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கல்குவாரி விபத்து தொடர்பாக நான்கு பேரை சிறப்பு புலனாய்வுக் குழு வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட நான்கு பேரில் அனில் குமார் (59), சந்திரசேகர் (46), கௌரவ் சிங் (34), அஜய் குமார் (44) ஆகியோர் அடங்குவர்.
இந்த நான்கு பேரும் அந்த இடத்தில் சுரங்க நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டனர்.
சந்திரசேகர், கௌரவ் சிங் மற்றும் அஜய் குமார் ஆகியோர் சோன்பத்ராவைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அனில் குமார் ஜார்க்கண்டைச் சேர்ந்தவர் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.