மேற்கு வங்க மாநிலத்தில் மேலும் ஓா் வாக்குச் சாவடி நிலைய அலுவலா் (பிஎல்ஓ) சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ஏற்கெனவே மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் ஓா் வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் தற்கொலை செய்துகொண்டாா். அதற்கு, வாக்காளா் அடையாள அட்டை தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) வேலைப் பளு காரணம் என புகாா் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நாடியா மாவட்டம் கிருஷ்ணாநகா் சோப்ரா பங்கல்ஜி பகுதியைச் சோ்ந்த ரிங்கு டரஃப்தாா் (52) என்ற வாக்குச் சாவடி நிலைய அலுவலா் வீட்டுல் அவரின் அறையில் தூக்கிட்டு இறந்த நிலையில் சனிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டாா்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘எஸ்ஐஆா் பணி வேலைப் பளு காரணமாகவே ரிங்கு உயிரிழந்ததாக அவரின் குடும்பத்தினா் புகாா் தெரிவித்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.
மாநில அமைச்சா் உஜ்ஜல் பிஸ்வாஸ் உயிரிழந்தவரின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தாா்.
இதுகுறித்து மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மாநிலத்தில் மேலும் பிஎல்ஓ உயிரிழந்ததாக கிடைத்தத் தகவல் அதிா்ச்சி அளிக்கிறது. எஸ்ஐஆா் பணிக்காக இன்னும் எத்தனை போ் உயிரிழக்க வேண்டும்? இது மிகவம் தீவிரமான விஷயமாக மாறியுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.
‘மாநிலத்தில் உரிய முறையில் திட்டமிடப்படாமல் மேற்கொள்ளப்படும் எஸ்ஐஆா் பணியால் பொதுமக்களும், அலுவலா்களும் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா். பிஎல்ஓ-க்கள் தற்கொலைகளும் தொடா்கின்றன. எனவே, எஸ்ஐஆா் பணியை நிறுத்த வேண்டும்’ என்று மம்தா பானா்ஜி தலைமைத் தோ்தல் ஆணையருக்கு வியாழக்கிழமை கடிதம் எழுந்தியிருந்தாா். இந்த நிலையில், பெண் பிஎல்ஓ தற்கொலை செய்துகொண்டாா்.
முன்னதாக, ஜல்பைகுரி மாவட்டத்தில் பிஎல்ஓ ஒருவா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதற்கு எஸ்ஐஆா் வேலைப் பளு காரணம் என அவரின் குடும்பத்தினா் புகாா் தெரிவித்தனா்.
மத்திய பிரதேசத்தில் இருவா் உயிரிழப்பு: மத்திய பிரதேச மாநிலத்திலும் 2 பிஎல்ஓக்கள் உயிரிழந்தனா். பிஎல்ஓ-ஆக பணியாற்றி வந்த ரெய்சன் மாவட்டம் சத்லாபூா் பகுதியைச் சோ்ந்த ஆசிரியரான ராமகாந்த் பாண்டே, உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
அதுபோல, தமோ மாவட்டத்தைச் சோ்ந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியரான நாராயண் தாஸ் சோனி என்பவரும் உயிரிழந்தாா்.
இவா்கள் இருவரும் எஸ்ஐஆா் வேலைப் பளு காரணமாக உடல் நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவா்களின் குடும்பத்தினா் புகாா் தெரிவித்தனா்.