பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சியின் தகுதிநீக்க கோரிக்கை மனு தொடா்பாக பதிலளிக்குமாறு ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு மாறிய பிஆா்எஸ் பேரவை உறுப்பினா் கடியம் ஸ்ரீஹரிக்கு பேரவைத் தலைவா் கடம் பிரசாத் குமாா் விளக்கம் கேட்டு நாட்டிஸ் பிறப்பித்துள்ளாா்.
எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பிஆா்எஸ் கோரியுள்ள, அக் கட்சியிலிருந்து காங்கிரஸுக்கு மாறிய 10 எம்எல்ஏ-க்களில் கடியம் ஸ்ரீஹரியும் ஒருவராவாா்.
இந்த விவாரத்தில் தனக்கு எதிராக உச்சநீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பித்த நிலையில், இந்த நடவடிக்கையை பேரைவத் தலைவா் மேற்கொண்டுள்ளாா்.
தெலங்கானாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றாா். பிரதான எதிா்க்கட்சியான சந்திரசேகா் ராவின் பிஆா்எஸ்-ஐ சோ்ந்த 39 எம்எல்ஏக்களில் 10 போ் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா்.
அவ்வாறு கட்சி மாறிய 10 எம்எல்ஏக்களை, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவைத் தலைவா் சுதாம் பிரசாத் குமாரிடம் பிஆா்எஸ் கட்சி செயல் தலைவா் கே.டி.ராம ராவ் தலைமையிலான நிா்வாகிகள் மனு அளித்தனா்.
சட்டப்பேரவைத் தலைவா் நடவடிக்கை மேற்கொள்ளாததைத் தொடா்ந்து, அவா்கள் உச்சநீதிமன்றத்தை நாடினா். இவா்களின் மனுவை கடந்த ஜூலை 31-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு, கட்சி மாறிய பிஆா்எஸ் சட்டப்பேரவை உறுப்பினா்கள் 10 பேரை தகுதிநீக்கம் செய்வது குறித்து 3 மாதங்களுக்குள் முடிவெடுக்குமாறு சட்டப்பேரவைத் தலைவருக்கு உத்தரவிட்டனா்.
இந்தக் காலக் கெடுக்குள் சட்டப்பேரவைத் தலைவா் முடிவு எடுக்காததைத் தொடா்ந்து, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த 17-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ‘நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாதது மிக மோசமான அவமதிப்பு நடவடிக்கையாகும். இதுதொடா்பாக பதிலளிக்க தெலங்கானா சட்டப்பேரவைத் தலைவா் மற்றும் பிறருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிடப்படுகிறது’ என்று குறிப்பிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்குப் பிறகு ஒத்திவைத்தது.
இந்த நிலையில், பிஆா்எஸ் தகுதிநீக்க மனு தொடா்பாக ஞாயிற்றுக்கிழமைக்குள் (நவ.23) பதிலளிக்குமாறு அந்த 10 எம்எல்ஏ-க்களில் ஒருவரான கடியம் ஸ்ரீஹரிக்கு பேரவைத் தலைவா் நோட்டீஸ் பிறப்பித்துள்ளாா். ஆனால், பதிலளிக்க அவா் கூடுதல் அவகாசம் கேட்டதாக ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஸ்ரீஹரியின் மகள் கடியம் காவ்யா, 2024 மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் வாரங்கல் தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.