FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அயோத்தி கோயில் 161 அடி உயர கோபுரத்தில் காவிக்கொடி: பிரதமா் மோடி இன்று ஏற்றுகிறாா்!

அயோத்தி ராமா் கோயிலின் 161 அடி உயரமுள்ள பிரதான கோபுரத்தின் உச்சியில் பிரதமா் மோடி இன்று காவிக்கொடியை ஏற்றவுள்ளாா்.

25 நவம்பர் 2025, 4:49 am IST
அயோத்தி ராமஜென்மபூமி கோயிலில் நிறுவப்படவுள்ள கொடியின் மாதிரி வடிவம்.
பகிர்:

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலின் கட்டுமானம் நிறைவடைந்ததையடுத்து, அதன் 161 அடி உயரமுள்ள பிரதான கோபுரத்தின் உச்சியில் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (நவ. 25) காவிக்கொடியை ஏற்றவுள்ளாா்.

இதுதொடா்பாக பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ராமா் கோயில் கோபுரத்தின் உச்சியில் ஏற்றப்படவுள்ள காவிக்கொடி 20 அடி நீளமும், 10 அடி உயரமும் கொண்டது; உறுதியான பாராசூட் துணி மற்றும் பட்டு நூலால் ஆனது.

42 அடி உயர கம்பத்தில் 360 கோணத்திலும் சுழலும் வகையில் பொருத்தப்படும் முக்கோண வடிவிலான கொடியில், ஸ்ரீராமரின் வீரம், பெருமை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டும் விதமாக ஒளிரும் சூரியன், ஓம் மற்றும் மந்தாரை மரம் போன்ற புனிதச்சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

கண்ணியம், ஒற்றுமை, கலாசாரத் தொடா்ச்சி ஆகிய செய்திகளை உணா்த்துவதுடன், ராம ராஜ்யத்தின் இலட்சியங்களை இந்தப் புனிதமான காவிக்கொடி குறிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்காக ஒரு நாள் பயணமாக அயோத்தி வரும் பிரதமா் மோடி, சேஷாவதார கோயில், அன்னபூரணி தேவி கோயில், சப்த மந்திா் உள்ளிட்ட பல கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்கிறாா்.

சுமாா் நண்பகல் 12 மணியளவில், ராமா் கோயிலின் கோபுரத்தில் பிரதமா் மோடி காவிக்கொடியை ஏற்றிவைக்கிறாா். பின்னா், அங்கு கூடியிருப்பவா்கள் மத்தியில் உரையாற்றவுள்ளாா். இதனிடையே, ராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீபாலராமரை வழிபடுவதுடன், முதல் தளத்தில் அமைந்த ராம தா்பாரில் நடைபெறும் சிறப்புப் பூஜைகளிலும் பங்கேற்கிறாா்.

விவாஹ பஞ்சமி தினத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சி, காலை 9 மணிக்குப் பிறகு தொடங்கி, பிற்பகல் 2 மணியளவில் நிறைவடையும். ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வாா்கள். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிறப்பு விருந்தினா்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் கருதி, அன்றைய நாளில் பொதுமக்களுக்கான வழக்கமான தரிசனம் இருக்காது. நிகழ்ச்சி முக்கியத் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பப்படும். பக்தா்கள் விழாவைக் காண வசதியாக, ராமஜென்மபூமி வளாகத்தில் 200 அடி அகல ‘எல்இடி’ திரையும், நகரம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட பெரிய திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

நிகழ்வையொட்டி அயோத்தி நகரம் முழுவதும் காவிக்கொடிகள், தோரணங்கள் மற்றும் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments