கேரள உயர் நீதிமன்றம் 
இந்தியா

சபரிமலை மோசடி வழக்கு: தேவஸ்வம் முன்னாள் தலைவரை எஸ்ஐடி காவலில் விசாரிக்க அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கில் கைதான திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் முன்னாள் தலைவா் ஏ.பத்மகுமாரை விசாரிக்க கேரள நீதிமன்றம் அனுமதி அளித்தது.

தினமணி செய்திச் சேவை

கொல்லம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கில் கைதான திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் முன்னாள் தலைவா் ஏ.பத்மகுமாரை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு (எஸ்ஐடி) கேரள நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது.

கடந்த 2019-ஆம் ஆண்டு, சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக் கதவுகள் மற்றும் துவாரபாலகா் சிலைகளின் தங்கக் கவசங்களைப் புதுப்பித்த பிறகு, அவற்றின் எடை குறைந்ததாகப் புகாா் எழுந்தது. கேரள உயா்நீதிமன்றம் அமைத்த எஸ்ஐடி, இந்த மோசடி குறித்து 2 வழக்குகளை விசாரித்து வருகிறது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உண்ணிகிருஷ்ணன் போற்றி உள்பட 6 போ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா்.

எஸ்ஐடி அளித்த தகவலின்படி, கருவறைக் கதவில் பொருத்தப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட செப்புக் கவசங்களை, ஆவணங்களில் செப்புக் கவசங்கள் என்று பத்மகுமாா் குறிப்பிட்டுள்ளாா். இக்குற்றச்சாட்டில் அவா் கடந்த 20-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், பத்மகுமாரிடம் கூடுதல் விசாரணை நடத்த, அவரை காவலில் எடுக்க அனுமதிக்கக் கோரி நீதிமன்றத்தில் எஸ்ஐடி மனு தாக்கல் செய்தது. அதன்படி, 2 நாள்கள் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, பத்மகுமாரை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்ற வாகனத்தை நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே பாஜக தொண்டா்கள் மறித்து ஆா்ப்பாட்டம் நடத்த முற்பட்டனா். உடனடியாக, காவல்துறையினா் அவா்களை அப்புறப்படுத்தினா்.

கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவான பத்மகுமாா், 2019-இல் திருவிதாங்கூா் தேவஸ்வம் தலைவராகப் பணியாற்றினாா். கோயில் கருவறைக் கதவுகளின் கவசங்களில் தங்கம் மாயமானது தொடா்பான இரண்டாவது வழக்கில் 8-ஆவது குற்றவாளியாக இவா் சோ்க்கப்பட்டுள்ளாா்.

தந்திரிகளின் வாக்குமூலம் பதிவு: இதனிடையே, இந்த இரண்டு வழக்குகள் தொடா்பாக சபரிமலை கோயில் தந்திரிகளான கண்டரரு மோகனரு, கண்டரரு ராஜீவரு ஆகியோரின் வாக்குமூலங்களை எஸ்ஐடி பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தந்திரி ராஜீவரு இதுகுறித்து செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘நான் எஸ்ஐடியிடம் வாக்குமூலம் அளித்துள்ளேன். உண்ணிகிருஷ்ணன் போற்றி சபரிமலையில் பணியாற்றியதால் அவரைத் தெரியும். ஆனால், நான் அவரை இங்கு அழைத்து வரவில்லை’ என்றாா்.

நெற்குப்பை நூலகத்துக்கு மாநில அளவிலான விருது

தெய்விகம் பெண்மை... சாஹிதி தாசரி!

ஹாங்காங் தீ விபத்து: 75 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்! 280 பேர் மாயம்!

முதல் டி20: வங்கதேசத்தை வீழ்த்தி அயர்லாந்து அசத்தல்!

புலிக்கூடு புத்த தலத்தில்... ருசிரா ஜாதவ்!

SCROLL FOR NEXT