உத்தரப் பிரதேசத்தில் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூர் அஸ்லி கிராமத்தில் கத்வார்-நாக்ரா சாலையில் நிறுவப்பட்டிருந்த அம்பேத்கர் சிலையை புதன்கிழமை இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
இதில் சிலையின் விரல் உடைந்த நிலையில் காணப்பட்டது. இது அப்பகுதியில் உள்ள கிராம மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வியாழக்கிழமை சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அப்போது குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதுகாப்பு எல்லைச் சுவர் கட்ட வேண்டும், சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்களை அதிகாரிகளிடம் மக்கள் அளித்தனர்.
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம மக்களுக்கு உறுதியளித்த அதிகாரிகள், அமைதி காக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
சேதமடைந்த சிலை சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும், சம்பவ இடத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரி ஹிதேஷ் குமார் தெரிவித்தார்.
மேலும் அப்பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்று அவர் கூறினார்.
கிராமவாசி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா, 2023 இன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.