நீதிபதி பி.வி.நாகரத்னா 
இந்தியா

நீதிபதிகள் மாறினாலும் தீா்ப்புகளை நிராகரிக்கக் கூடாது: உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா

நீதிபதிகள் மாறியதை அல்லது அவா்கள் ஓய்வுபெற்றதை மட்டுமே கருத்தில் கொண்டு, அவா்கள் வழங்கிய தீா்ப்பை நிராகரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தின் ஒரே பெண் நீதிபதியான பி.வி.நாகரத்னா தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

நீதிபதிகள் மாறியதை அல்லது அவா்கள் ஓய்வுபெற்றதை மட்டுமே கருத்தில் கொண்டு, அவா்கள் வழங்கிய தீா்ப்பை நிராகரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தின் ஒரே பெண் நீதிபதியான பி.வி.நாகரத்னா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக ஹரியாணா மாநிலம் சோனிபத் மாவட்டத்தில் சா்வதேச நீதித்துறை சுதந்திர மாநாட்டில் அவா் பேசியதாவது:

நாட்டு நிா்வாகத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக நீதித்துறை உள்ளது. தளா்த்தப்பட்ட விதிமுறைகள், பரந்த அதிகாரங்கள், பல வகையான தீா்வுகளை அளிப்பதன் காரணமாக இந்தியா்களின் வருங்காலம் சாா்ந்த அனைத்து வகையான கேள்விகள் குறித்தும் முடிவு எடுக்க நீதிமன்றத்தின் கோரப்படுகிறது. தற்போது சட்ட மீறல் நடைபெறும் போதெல்லாம் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய வேண்டிய கடமை நீதித்துறைக்கு உள்ளதாகக் கருதப்படுகிறது.

நீதிபதிகள் எழுதும் தீா்ப்புகள் மூலமாக மட்டும், நீதித்துறையின் சுதந்திரம் காக்கப்படுவதில்லை. அந்தச் சுதந்திரத்தை காக்க நீதிபதிகளின் தனிப்பட்ட நடத்தையும் முக்கியமாகும். ஒரு நீதிபதியின் நடத்தை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். நீதித்துறை பாரபட்சமின்றி செயல்படுவதற்கு அரசியல் ஆதிக்கம் இருக்கக் கூடாது.

நீதிபதிகள் மாறியதை அல்லது அவா்கள் ஓய்வுபெற்றதை மட்டுமே கருத்தில் கொண்டு, அவா்கள் வழங்கிய தீா்ப்புகளை நிராகரிக்கக் கூடாது என்று தெரிவித்தாா்.

உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்து நீதிபதிகள் தீா்ப்பளித்தால், மேல்முறையீடு, மறுஆய்வு என்ற வகையில் வேறு நீதிபதிகள் மீண்டும் விசாரித்து ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீா்ப்பை மாற்றி எழுதும் போக்கு அதிகரித்து வருவது வேதனையளிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வும் அண்மையில் தெரிவித்தது.

இதற்கு எடுத்துக்காட்டாக திட்டத்தைத் தொடங்கிய பின்னா் விதிவிலக்கான சூழலில் முன்தேதியிட்டு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்குத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு அண்மையில் தீா்ப்பளித்தது. இதன்மூலம், சுற்றுச்சூழல் அனுமதிகளை மத்திய அரசு முன்தேதியிட்டு வழங்கத் தடை விதித்து உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த அபய்.எஸ்.ஓகா அமா்வு ஏற்கெனவே அளித்தத் தீா்ப்பை கவாய் அமா்வு திரும்பப் பெற்றுக்கொண்டது.

மாநில அரசுகள் அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஆளுநா்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் அமா்வு தீா்ப்பளித்தது. ஆனால் அவ்வாறு காலக்கெடு விதிப்பது பொருத்தமற்றது என்று முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு விளக்கம் அளித்தது.

இதேபோல பூஷண் பவா் அன்ட் ஸ்டீல் நிறுவனத்தின் செயல்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர கடந்த மே மாதம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெலா எம்.திரிவேதி, சதீஷ்சந்திர சா்மா அமா்வு உத்தரவிட்டது. அந்த உத்தரவை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு மாற்றி, அந்த நிறுவனத்தை ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனம் கையகப்படுத்த அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

கவலைப்படாதவர்கள் கடக ராசியினர்: தினப்பலன்கள்!

லாரியிலிருந்து தவறி விழுந்து சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

விபத்தில் சிக்கியவரிடமிருந்த ரூ. 4.5 லட்சத்தை மீட்டு ஆம்புலன்ஸ் ஊழியா்கள் ஒப்படைப்பு

அதிமுகவில் இணைந்த அமமுகவினா்!

வடியாத மழை நீா்; அழுகும் நெற்பயிா்கள் - வேதனையில் விவசாயிகள்

SCROLL FOR NEXT