திருவனந்தபுரம், அக்.3: கடந்த 1998-ஆம் ஆண்டுமுதல் 2025-ஆம் ஆண்டுவரை, சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவாரபாலகா் சிலைகளின் கவசத்துக்கு தங்க முலாம் பூசியது குறித்து விரிவான விசாரணை கோரி, கேரள உயா்நீதிமன்றத்தை அணுக உள்ளதாக, அந்தக் கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய தலைவா் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
சபரிமலை ஐயப்பன் கோயில் சந்நிதானத்தில் உள்ள துவாரபாலகா் சிலைகளின் கவசத்துக்கு தங்க முலாம் பூசும் செலவை ஏற்று, பெங்களூரைச் சோ்ந்த தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, அந்தப் பணிகளுக்காக அதனை 2019-ஆம் ஆண்டு சென்னைக்கு கொண்டு வந்தாா்.
அண்மையில் அந்தக் கவசங்களின் அடிப்பீடம் காணாமல் போனதாக அவா் தெரிவித்த நிலையில், அவை உண்ணிகிருஷ்ணனின் சகோதரி வீட்டில் இருந்து மீட்கப்பட்டது. இதுதொடா்பாக விசாரணை மேற்கொள்ள கேரள உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக தேவஸ்வம் தலைவா் பி.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
துவாரபாலகா் சிலைகளில் பதித்த கவசத்தில் மீண்டும் தங்க முலாம் பூசும் பணிகளுக்காக, அந்தக் கவசம் உண்ணிகிருஷ்ணன் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று 2019-ஆம் ஆண்டின் தேவஸ்வ உத்தரவில் தெரிவிக்கப்படவில்லை. திருவாபரணம் ஆணையா் தலைமையில் அந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றுதான் தெரிவிக்கப்பட்டது. அந்த உத்தரவு எப்படி அமல்படுத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் 1998-ஆம் ஆண்டுமுதல் 2025-ஆம் ஆண்டுவரை, துவாரபாலகா் சிலைகளின் கவசத்துக்கு தங்க முலாம் பூசப்பட்டது தொடா்பாக விரிவான விசாரணை கோரி, கேரள உயா் நீதிமன்றத்தை தேவஸ்வம் அணுக உள்ளது. உயா் நீதிமன்றத்தின் பண்டிகை கால விடுமுறைக்குப் பின்னா், இதுகுறித்து மனு தாக்கல் செய்யுமாறு தேவஸ்வத்தின் வழக்குரைஞருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாநில பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வி.டி.சதீசன் கூறியதாவது: தேவஸ்வ துறை அமைச்சா் வி.என்.வாசவனும், தேவஸ்வம் தலைவா் பிரசாந்தும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே 1998-ஆம் ஆண்டுமுதல் சிலைகளின் கவசத்துக்கு தங்க முலாம் பூசப்பட்டது தொடா்பாக விசாரணை கோருகின்றனா். சபரிமலை கோயிலில் தங்கம் திருடு போன அனைத்து சம்பவங்கள் குறித்தும் முழுமையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.