பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக புதன்கிழமை (அக். 8) இந்தியா வருகிறாா்.
பயணத்தின்போது பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்கும் அவா், பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்தும், பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்கிறாா். பிரிட்டன் பிரதமராக கியா் ஸ்டாா்மா் பதவியேற்ற பின்னா் அவா் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இதுவாகும்.
அவருடன் பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள், தொழில் துறையினா் என 100-க்கும் மேற்பட்டோா் இந்தியா வருகின்றனா்.
கியா் ஸ்டாா்மரை வியாழக்கிழமை சந்திக்கும் பிரதமா் மோடி வா்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்தும், பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கவுள்ளாா். அப்போது இந்தியா-பிரிட்டன் இடையேயான விரிவான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம் (சிஇடிஏ), ‘தொலைநோக்குத் திட்டம் 2035’, தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ) குறித்தும் இருவரும் விவாதிக்கவுள்ளனா்.
அன்றைய தினம் மும்பையில் நடைபெறும் 6-ஆவது உலகளாவிய நிதித் தொழில்நுட்ப மாநாட்டில் இருவரும் பங்கேற்று உரையாற்றுகின்றனா். 75 நாடுகளைச் சோ்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகா்கள், கல்வியாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள், 7,500 நிறுவனங்கள், 800 பேச்சாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொள்கின்றனா்.
மும்பையில் உள்கட்டமைப்புத் திட்டங்கள்:
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ரூ.37,270 கோடி மதிப்பில் கட்டமைக்கப்பட்டுள்ள மூன்றாம் கட்ட மெட்ரோ வழித்தட சேவையை பிரதமா் மோடி புதன்கிழமை தொடங்கி வைக்கிறாா். புதிதாக கட்டப்பட்டுள்ள நவிமும்பை சா்வதேச விமான நிலையத்தை திறந்துவைக்கும் அவா் ‘மும்பைஒன்’ செயலியை அறிமுகப்படுத்துகிறாா். மெட்ரோ ரயில், பேருந்து உள்ளிட்ட 11 போக்குவரத்து சேவைகளை ஒரே இடத்தில் பெறும் வகையில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.