மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் நச்சு கலந்த இருமல் மருந்தை உட்கொண்டதால் குழந்தைகள் இறந்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மருந்துகளின் பாதுகாப்பு குறித்த வழிமுறைகள் மாற்றப்பட்டு விதிகள் கடுமையாக்கப்பட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் கோல்ட்ரிஃப் எனும் இருமல் மருந்தைச் சாப்பிட்ட 14 குழந்தைகள் இறந்துள்ளனர். மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல ராஜஸ்தானிலும் குழந்தைகள் இறப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு தடை, பரிந்துரை செய்த மருத்துவர் கைது, இதர மருந்துகள் பரிசோதனை என நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் மேலும் 2 மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் அனைத்து மாநிலங்களிலும் இருமல் மருந்தால் உயிரிழந்த குழந்தைகள் தொடர்பான வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றும் வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் ஒரு பொதுநல மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இறந்த குழந்தைகளுக்கு நீதி கிடைக்கவும் மருந்து பாதுகாப்பை உறுதி செய்யவும் நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
மாநில அளவிலான தனித்தனி விசாரணைகளால்தான் இப்படி பொறுப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆபத்தான தரமற்ற மருந்துகள் சந்தைகளில் விற்கப்படுவதாகவும் சந்தேகத்திற்கிடமான அனைத்து மருந்துகளையும் சோதனைக்கு உள்ளாக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.