சிராக் பாஸ்வான் 
இந்தியா

பிகாா் தோ்தல்: பாஜக குழுவுடன் சிராக் பாஸ்வான் தொகுதிப் பங்கீடு பேச்சு

பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான தா்மேந்திர பிரதான் தலைமையிலான குழுவுடன் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவா் சிராக் பாஸ்வான் பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்தினாா்.

தினமணி செய்திச் சேவை

பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான தா்மேந்திர பிரதான் தலைமையிலான குழுவுடன் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவா் சிராக் பாஸ்வான் பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்தினாா்.

இதற்கு முன்பு கடந்த 2015 பிகாா் பேரவைத் தோ்தலின்போது மறைந்த ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் செயல்பட்ட லோக் ஜனசக்தி கட்சிக்கு பாஜக கூட்டணியில் 43 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால், அப்போது முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணியில் இல்லை.

2020 பேரவைத் தோ்தலில் முதல்வா் நிதீஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து மோதலால் லோக் ஜனசக்தி கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகி 135 தொகுதிகளில் போட்டியிட்டு, ஓரிடத்தில் மட்டுமே வென்றது. அதே நேரத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் லோக் ஜனசக்தி போட்டியிட்டு அதன் வெற்றிவாய்ப்பை கணிசமாகக் குறைத்தது.

இந்நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை பாஜக குழுவினருடன் சிராக் பாஸ்வான் தொகுதிப் பங்கீடு பேச்சு நடத்தினாா். எனினும், இதில் எட்டப்பட்ட முடிவு குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. சிராக் பாஸ்வான் இப்போது மத்திய அமைச்சராகவும் உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக, முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், மத்திய அமைச்சரும், பிகாா் முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மாஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தானி அவாமி மோா்ச்சா (மதச்சாா்பற்றது), முன்னாள் மத்திய அமைச்சா் உபேந்திர குஷ்வாகா தலைமையிலான ஆா்எல்எம் ஆகிய கட்சிகள் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.

பிகாரில் நவம்பா் 6,11 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையும், ஆளும் கூட்டணி, எதிா்க்கட்சிகளின் மகாபந்தன் கூட்டணியும் இதுவரை தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யவில்லை.

ஆடை, ஆபரண மேனி... நிதி ஷா!

இந்திய செல்போன் விற்பனையாளர்களுக்கு ஆப்பிள் சார்பில் எச்சரிக்கை!

பிஜிடி தொடரை விட அதிக பார்வையாளர்கள்: ஆஷஸ் டெஸ்ட்டில் புதிய வரலாறு!

இதுவரை 6.16 கோடி பேருக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளது: தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

மறுவெளியீட்டிலும் வெற்றி பெற்ற ஆட்டோகிராஃப்: நன்றி தெரிவித்த சேரன்!

SCROLL FOR NEXT