சென்னையில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று(அக்.8) காலைமுதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் கிரீன்வேஸ் சாலை - அபிராமிபுரத்தில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. 2 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் துல்கர் சல்மான் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். துணை ராணுவப் பாதுகாப்புடன் பலத்த சோதனை நடைபெற்று வருகிறது.
அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல் உயர் ரக கார்களை இறக்குமதி செய்யும் முறைகேடுகளைக் கண்டறிய நாடு முழுவதும் ‘ஆபரேஷன் நும்கூர்’ என்ற பெயரில் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கையின் ஒருபகுதியாக கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி கொச்சியின் பணம்பிள்ளி நகரில் உள்ள துல்கர் சல்மான், பிருத்விராஜ் மற்றும் எலம்குளத்தில் உள்ள மம்மூட்டி ஆகியோரின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, துல்கர் சல்மானின் 2 கார்களை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 39 கார்களில் மற்றவர்களின் 33 கார்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்ட நிலையில், விசாரணை நிலுவையில் இருப்பதால் துல்கர் சல்மானின் கார்கள விடுவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும், சோதனை நடவடிக்கை விவரங்கள் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா நாயகனான துல்கர் சல்மான், படத்தயாரிப்பிலும் கோலோச்சி வருகிறார். கடைசியாக இவரின் தயாரிப்பில் வெளியான ‘லோகா சாப்டர் 1’ திரைப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, மலையாளத் திரையுலகிலும் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.