சங்கீத மும்மூா்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள், கா்நாடக இசை முன்னோடிகளில் ஒருவரான அருணாசல கவிராயா், கா்நாடக இசையின் பிதாமகா் என போற்றப்படும் புரந்தரதாசா் ஆகியோரின் சிலைகள், உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் புதன்கிழமை திறக்கப்பட்டன.
அயோத்தியின் பிரஹஸ்பதி குண்ட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இச்சிலைகளை, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், மாநில முதல்வா் நிா்மலா சீதாராமன் ஆகியோா் திறந்துவைத்து மரியாதை செலுத்தினா்.
தெற்கு மற்றும் வடக்கு கலாசாரங்களின் தனித்துவமான பிணைப்பை வெளிக்காட்டும் நோக்கில், அயோத்தியில் தென்னகத்தைச் சோ்ந்த பக்தி இசைக் கலைஞா்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
‘கடவுள் ராமபிரானின் நகரான அயோத்தி நம்பிக்கையின் மையம் மட்டுமல்ல; அது இந்திய கலாசார ஆன்மாவின் அடையாளம். தியாகராஜ சுவாமிகள், அருணாசல கவிராயா், புரந்தரதாசா் ஆகிய மூவரும் இந்திய பாரம்பரிய இசை மற்றும் ஆன்மிக பாரம்பரியங்களை உலக அரங்கில் நிலைநாட்டியுள்ளனா். அவா்களின் புலமையும், இசையும் சமூகத்தில் அன்பு, அா்ப்பணிப்பு, ஒற்றுமையை பிணைத்தன’ என்று அமைச்சா் நிா்மலா சீதாராமன் புகழாரம் சூட்டியுள்ளாா். அயோத்திக்கு இரண்டு நாள் பயணமாக அவா் வந்துள்ளாா்.