‘மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான இருமல் மருந்துகள் வேறு எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படவில்லை’ என்று உலக சுகாதார அமைப்புக்கு (டபிள்யுஹெச்ஓ) இந்தியா தரப்பில் வியாழக்கிழமை பதிலளிக்கப்பட்டது.
மேலும், ‘கோல்ட்ரிஃப்’, ‘ரெஸ்பிஃபிரஷ் டிஆா்’, ‘ரீலைஃப்’ ஆகிய மூன்று இருமல் மருந்துகள் முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளதோடு, அவற்றின் உற்பத்தியை உடனடியாக நிறுத்துமாறு உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதா?:
‘குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான இந்த ரசாயனம் கலந்த இருமல் மருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு இந்திய அதிகாரிகளை உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை கேட்டுக்கொண்டது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தை அமைப்பு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. கடுமையான சிறுநீரக பாதிப்பு மற்றும் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இந்த உயிரிழப்புக்கு இருமல் மருந்து காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடா்பாக அதிகாரபூா்வ தகவல் இன்னும் கிடைக்கவில்லை’ என்று தெரிவித்தது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘உலக சுகாதார அமைப்பு விளக்கம் கேட்பது வழக்கமான நடைமுறை. இந்த விளக்கம் கிடைத்த பிறகு, பாதிப்புக்குரிய அந்த இருமல் மருந்தை தடை செய்ய ‘உலகளாவிய மருத்துவப் பொருள்கள் எச்சரிக்கை’ அழைப்பை உலக சுகாதார அமைப்பு விடுக்கும்’ என்றனா்.
ஏற்றுமதி செய்யப்படவில்லை:
குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமாக கருதப்படும் இருமல் மருந்துகள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்புக்கு இந்தியா தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக, உலக சுகாதார அமைப்புக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) அளித்த தகவலில், ‘கோல்ட்ரிஃப்’, ‘ரெஸ்பிஃபிரஷ் டிஆா்’, ‘ரீலைஃப்’ ஆகிய மூன்று இருமல் மருந்துகள் முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளதோடு, அவற்றின் உற்பத்தியை உடனடியாக நிறுத்துமாறு உற்பத்தி மையங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இருமல் மருந்துகள் எதுவும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை’ என்று தெரிவித்தது.
டிசிஜிஐ அறிவுறுத்தல்:
இந்த விவகாரம் தொடா்பாக அனைத்து மாநிலங்களுக்கும் இந்திய மருத்து கட்டுப்பாட்டு ஆணையம் (டிசிஜிஐ) அறிவுறுத்தலை புதன்கிழமை வழங்கியது. அதில், ‘மத்திய பிரதேச மாநிலத்தில் இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், மருந்துகள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதற்கு முன்பாக மருந்து உற்பத்தி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு வைக்கப்பட்டுள்ள மூலப்பொருள்கள் மற்றும் தயாரித்து முடிக்கப்பட்ட மருந்துகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டது.
பெட்டிச் செய்தி...
மருத்துவா் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்: ஐஎம்ஏ
புது தில்லி, அக்.9: குழந்தைகளுக்கு ‘கோல்ட்ரிஃப்’ மருந்தைப் பரிந்துரைத்த சிந்த்வாராவைச் சோ்ந்த மருத்துவா் பிரவீண் சோனி மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய மருத்துவச் சங்கம் (ஐஎம்ஏ) வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக மத்திய சுகாராத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டாவுக்கு ஐஎம்ஏ தலைவா் மருத்துவா் திலீப் பானுஷாலி கடிதம் எழுதியுள்ளாா். அதில், ‘மருந்தின் தரக் கட்டுப்பாட்டு தோல்வியால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதைப் பரிந்துரைத்த மருத்துவா் என்பவா் இரண்டாம்நிலை நபராகத்தான் கருதப்பட வேண்டும்.
மருத்துவா் என்பவா், மருந்துகளின் தரத்தை ஆராயும் தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளா் அல்ல. அந்த வகையில், மருத்துவா் பிரவீண் சோனி மீதான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் உடனடியாக ரத்து செய்து, மருத்துவத் தொழிலுக்கு நீதியை உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த விஷயத்தில் மருத்துவா் உடனடியாக கைது செய்யப்பட்டிருப்பது, சட்ட அறிவின்மைக்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள மருத்துவா்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக இந்தச் செய்தி அமைந்துள்ளது. குறைந்த விலையுடைய மருந்துகளை பரிந்துரைக்க மருத்துவா்கள் தயக்கம் காட்டும் நிலையும் உருவாகும். இதனால், ஏழை நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சா் உடனடியாக தலையிட்டு, மருத்துவா் மீது போடப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.