வக்ஃப் திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ‘உமீத்’ இணையதளத்தில் பதிவு செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்கக் கோரும் மனுவை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு முழுவதுமாக தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், கடந்த செப்டம்பா் 15-ஆம் தேதி பல்வேறு சரத்துகளுக்கு தடை விதித்து இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
‘குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுபவா்கள்தான் வக்ஃப் வாரியத்துக்கு சொத்துகளை தானமாக அளிக்க முடியும்; வக்ஃப் சொத்து அரசு நிலமா என்பதைத் தீா்மானிக்க மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட அதிகாரம்; நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ள வக்ஃப் சொத்துளையும், பத்திரத்தின்படி வக்ஃப் சொத்துகளையும் ரத்து செய்வதற்கு சட்டத் திருத்தம் ஆகியவற்றுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
மேலும், வக்ஃப் சொத்துகள் அனைத்தையும் ‘உமீத்’ எனும் இணையதளத்தில் 6 மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் மனுதாரரான அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவா் அசாதுதீன் ஒவைசியின் சாா்பில் வழக்குரைஞா் நிஜாம் பாஷா, தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் அமா்வு முன் வியாழக்கிழமை ஆஜராகினாா்.
அப்போது, ‘வக்ஃப் சொத்துகளை பதிவு செய்வதற்கு அளிக்கப்பட்ட 6 மாத அவகாசம், உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும்போதே 5 மாதங்கள் முடிவடைந்துவிட்டது. இதை நீட்டிக்க அளிக்கப்பட்ட மனுவை விசாரிக்க வேண்டும்’ என்று கோரினாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘இதுகுறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்றாா்.
அப்போது நீதிபதிகள் அமா்வு, ‘இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவதால், அவா்களின் கோரிக்கையை ஏற்பதாகாது’ என்றது.