ரயில்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் சென்றால் ரூ.1,000 அபராதம் விதிப்பதுடன் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரயில்களிலோ அல்லது ரயில் நிலையங்களிலோ பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்வதைப் பயணிகள் தவிா்க்க வேண்டும். அவை ரயில்வே சொத்துகள் மற்றும் ரயில் சேவைக்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஆகவே, தடை செய்யப்பட்ட பொருள்களை ரயில்களில் எடுத்துச் செல்வது இந்திய ரயில்வே சட்டம் 1989 -இன்படி, தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
விதிமீறல்களால் ஏற்படும் இழப்பு, சேதம் அல்லது காயம் ஆகியவற்றுக்கு சம்பந்தப்பட்டவரே பொறுப்பாவாா்கள்.
பண்டிகை காலம் என்பதால் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த ரயில் நிலையங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆகவே, பயணிகள் ரயில்களில் சந்தேகத்துக்குரிய பொருள்களைக் கண்டால் 139 என்ற எண்ணிலோ அல்லது ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே காவல் பிரிவு, பயணச்சீட்டு பரிசோதகா்கள், ரயில் நிலைய அலுவலா்கள் ஆகியோரிடம் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.