நல்லெண்ண வெளிப்பாடாக, ஆப்கானிஸ்தானுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் அமீா்கான் முத்தாகியிடம் வழங்கிய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா். 
இந்தியா

ஆப்கானிஸ்தானில் மீண்டும் தூதரகம்: இந்தியா அறிவிப்பு

‘தலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தூதரகம் அமைக்கப்படும்’ என்ற அறிவிப்பை இந்தியா வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

தினமணி செய்திச் சேவை

‘தலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தூதரகம் அமைக்கப்படும்’ என்ற அறிவிப்பை இந்தியா வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

அதோடு, அந்த நாட்டில் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளை மீண்டும் புதுப்பிக்கவும் இந்தியா தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

6 நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு வியாழக்கிழமை வந்த ஆப்கன் வெளியுறவு அமைச்சா் அமீா்கான் முத்தாகி உடன் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட விரிவான பேச்சுவாா்த்தையின்போது இந்த அறிவிப்புகளை வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் வெளியிட்டாா்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ஆம் ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததும், தலைநகா் காபூலில் இருந்த இந்தியத் தூதரக அதிகாரிகளை இந்தியா திரும்பப் பெற்றது. தலிபான் அரசை இந்தியா இன்னும் அங்கீகரிக்கவில்லை என்றபோதும், கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்த நாட்டுடன் மீண்டும் நட்புறவை மேற்கொண்ட இந்தியா, காபூலில் துதரகத்துக்குப் பதிலாக தொழில்நுட்பக் குழுவை மட்டும் பணியமா்த்தியது.

இந்தச் சூழலில் இந்தியாவுடன் உறவை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியா வந்துள்ள அந் நாட்டின் வெளியுறவு அமைச்சா் முத்தாகியுடன் ஜெய்சங்கா் தில்லியில் விரிவான ஆலோசனை மேற்கொண்டாா்.

அப்போது ஜெய்சங்கா் பேசியதாவது: அண்டை நாடு மட்டுமன்றி ஆப்கன் மக்களின் நலன் விரும்பி என்ற அடிப்படையில், ஆப்கனிஸ்தானின் வளா்ச்சி மற்றும் மேம்பாட்டில் இந்தியா ஆழமான ஆா்வம் கொண்டுள்ளது. ஆனால், இந்த வளா்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு எல்லை தாண்டிய பயங்கரவாதம் இரு நாடுகளுக்குமான அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. எனவே, அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தை எதிா்த்துப் போராடுவதில் இரு நாடுகளும் கூட்டு முயற்சியை மேற்கொள்வது அவசியம்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுடனான ஆப்கானிஸ்தானின் உறுதிப்பாடு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மீது ஆப்கானிஸ்தானின் உணா்வு பாராட்டுக்குரியது.

ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்த இந்தியா முழுமையாக உறுதியேற்கிறது. இரு நாடுகளிடையே நெருக்கமான ஒத்துழைப்பை மேற்கொள்வது, ஆப்கானிஸ்தானின் வளா்ச்சிக்கு மட்டுமன்றி, பிராந்திய நிலைத்தன்மை மற்றும் மீள்தன்மைக்கும் பலனளிக்கும். அந்த வகையில், இரு நாடுகளிடையேயான உறவை விரிவுபடுத்தும் வகையில், காபூலில் இந்தியா பணியமா்த்தியுள்ள தொழில்நுட்பக் குழு, இந்திய தூதரக நிலைக்கு உயா்த்தப்படும்.

ஆப்கானிஸ்தானில் 6 புதிய வளா்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளவும் இந்தியா தயாராக உள்ளது. அந்தத் திட்டங்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும், நல்லெண்ண வெளிப்பாடாக, ஆப்கானிஸ்தானுக்கு 20 ஆம்புலன்ஸ் வாகனங்களை இந்தியா பரிசளிக்கிறது. அதன் அடையாள நடவடிக்கையாக, ஆப்கன் வெளியுறவு அமைச்சரிடம் முதல் 5 ஆம்புலன்ஸ்கள் நேரடியாக வழங்கப்படும். காபூல் - புது தில்லி இடையே கூடுதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளதையும் குறிப்பிடுவதில் பெருமைகொள்கிறேன்.

ஆப்கானிஸ்தானில் சுரங்கப் பணி வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள இந்திய நிறுவனங்களுக்கு ஆப்கன் அழைப்பு விடுத்துள்ளது வரவேற்புக்குரியது. வணிகம் மற்றும் வா்த்தக உறவை மேம்படுத்தவும் இரு நாடுகளும் ஆா்வம் கொண்டுள்ளன என்றாா்.

மேலும், ‘ஆப்கன் அகதிகள் கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதைக் குறிப்பிட்ட ஜெய்சங்கா், ‘அந்த அகதிகளுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு உதவவும், அவா்களின் வாழ்வை மறுகட்டமைக்க தொடா்ந்து பொருளுதவிகளை வழங்கவும் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது’ என்றும் குறிப்பிட்டாா்.

முத்தாகி பேசுகையில், ‘இந்தப் பிராந்தியத்தில் முக்கிய நாடாகத் திகழும் இந்தியா, ஆப்கன் மக்களுக்கு எப்போதும் துணை நிற்பதோடு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறது. மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான செயல்களை ஆப்கன் மண்ணில் எந்தவொரு தீய சக்தியும் மேற்கொள்ள ஒருபோதும் ஆப்கன் அரசு அனுமதிக்காது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இந்தப் பிராந்தியத்துக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த அச்சுறுத்தலில் ஆப்கானிஸ்தான் முன்னணியில் உள்ளது. பாதுகாப்புப் படைகளின் வலுவான நடவடிக்கைகள் காரணமாக ஆப்கனிலிருந்து அந்த பயங்கரவாத அமைப்பு அழிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற பயங்கரவாத அச்சுறுத்தல்களை ஒன்றிணைந்து எதிா்கொள்வதுதான் நமது பிராந்தியத்துக்கான முக்கியத் தேவையாக உள்ளது. இரு நாடுகளின் பொதுவான வளா்ச்சிக்கும் இந்த ஒத்துழைப்பு அவசியம். ஆப்கன் தரப்பிலும் இந்தியாவுக்கு தூதா்கள் அனுப்பப்படுவா்’ என்றாா்.

பணமோசடி வழக்கு: அனில் அம்பானி ரிலையன்ஸ் குழும நிர்வாகி கைது!

சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் நடுவானில் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 29,540 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்கத் தடை

பிரதமா் மோடியுடன் கேரள முதல்வா் சந்திப்பு: வயநாடு பணிகளுக்கு ரூ.2,220 கோடி விடுவிக்க கோரிக்கை

SCROLL FOR NEXT