இரவில் பெண்கள் வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
துர்காபூரில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், கல்லூரியை விட்டு மாணவிகளை இரவில் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி, துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் தங்கி பயின்று வருகிறார். இரண்டாமாண்டு எம்.பி.பி.எஸ். படித்து வரும் அவர், தோழியுடன் கடந்த வெள்ளிக்கிழமை இரவு உணவுக்காக விடுதியை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது சில ஆண்கள் சேர்ந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கொல்கத்தா விமான நிலையத்தில் முதல்வர் மமதா பானர்ஜி செய்தியாளர்களுடன் பேசியதாவது,
''மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. தற்போது வரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனக் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தை குற்றம் சாட்டி அவர் பேசியதாவது, அவர் (மாணவி) தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார். இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? இரவு 12.30 மணிக்கு அவர் எப்படி வெளியே சென்றார்? பெண்கள் இரவில் வெளியே (கல்லூரி விடுதியில் இருந்து) செல்ல அனுமதிக்கக் கூடாது. அவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
விடுதியில் தங்கி படித்துவரும், குறிப்பாக மேற்கு வங்கத்திற்கு வெளியே இருந்து வரும் மாணவிகள் விதிகளை பின்பற்ற வேண்டும். நள்ளிரவில் வெளியே செல்வதை அவர்கள் தவிர்க்க வேண்டும். எங்குச் சென்று வரவும் அவர்களுக்கு உரிமை உள்ளது என்றாலும், அவர்கள் இதனைத் தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு நபரின் நடவடிக்கைகளை கண்காணிப்பதில் காவல் துறைக்கு சில தளவாட கட்டுப்பாடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டை விட்டு, விடுதியை விட்டு வெளியே செல்லும் ஒவ்வொருவருடனும் காவல் துறையினர் வர முடியாது. கல்லூரியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாணவிகளின் பாதுகாப்பை கல்லூரி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டியது கட்டாயம்.
இந்த விவகாரத்தில் விடிவதற்குள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இது தொடர்பாக விரைவில் விரிவான தகவல்கள் வெளிவரும்'' என முதல்வர் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | தகவல் அறியும் உரிமை சட்டம் அமைப்பு ரீதியாக சிதைக்கப்பட்டுவிட்டது! -கார்கே
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.