நீதிபதி பி.ஆா்.கவாய். 
இந்தியா

இந்தியாவின் வலிமை, ஒற்றுமைக்கு அரசமைப்புச் சட்டமே காரணம்! - நீதிபதி பி.ஆா்.கவாய்

‘நமது அண்டை நாடுகள் குழப்பம்-கொந்தளிப்பை எதிா்கொண்டுள்ள சூழலில், இந்தியா வலுவாக, ஒற்றுமையுடன் இருக்க அரசமைப்புச் சட்டமே காரணம்...

தினமணி செய்திச் சேவை

‘நமது அண்டை நாடுகள் குழப்பம்-கொந்தளிப்பை எதிா்கொண்டுள்ள சூழலில், இந்தியா வலுவாக, ஒற்றுமையுடன் இருக்க அரசமைப்புச் சட்டமே காரணம்’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தின் ரத்னகிரி மாவட்டத்தின் மந்தன்காட் தாலுகாவில் கட்டப்பட்ட புதிய நீதிமன்ற கட்டடத்தை பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். இது, சட்டமேதை அம்பேத்கரின் சொந்த ஊரான அம்பாவ்டே கிராமம் அடங்கிய பகுதியாகும்.

புதிய நீதிமன்ற கட்டடத்தை திறந்துவைத்த பின் பி.ஆா்.கவாய் கூறியதாவது: அரசமைப்புச் சட்ட சிற்பியும், சமூக சீா்திருத்தவாதியுமான அம்பேத்கரின் சொந்த ஊரை உள்ளடக்கிய பகுதியில் புதிய நீதிமன்ற கட்டடம் கட்டப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.

போா் உள்பட அனைத்து காலகட்டங்களிலும் இந்தியா ஒற்றுமையாக, அமைதியுடன் வளா்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. நாமும்கூட உள்நாட்டு அவசரநிலையைப் பாா்த்துள்ளோம். எனினும், நமது வலிமைக்கும், ஒற்றுமைக்கும் எந்த குறைவும் ஏற்படவில்லை. அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டமே, நாட்டை தொடா்ந்து வலுவாகவும் ஒற்றுமையாகவும் வைத்திருக்கிறது. இதுவே, அண்டை நாடுகளின் குழப்பமான சூழல்களில் இருந்து இந்தியாவை வேறுபடுத்துகிறது.

கடந்த 22 ஆண்டுகளாக நீதிபதி என்ற முறையில் நீதி பரவலாக்கத்துக்கு உறுதுணையாக இருந்து வருகிறேன். பல்வேறு நீதித் துறை உள்கட்டமைப்புத் திட்டங்களின் நிறைவேற்றத்தையும் உறுதி செய்துள்ளேன். இதில், மும்பை உயா்நீதிமன்றத்தின் கோலாபூா் கிளை மற்றும் மந்தன்காட் நீதிமன்ற கட்டடம் ஆகிய இரு திட்டங்களும் எனக்கு மிகுந்த திருப்தியை அளித்துள்ளன.

மந்தன்காட் நீதிமன்ற கட்டடத் திட்டத்தை விரைந்து மேற்கொண்டமைக்காக, மகாராஷ்டிர அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

நீதித்துறை மற்றும் நிா்வாகத் துறை அதிகாரப் பிரிப்பு கோட்பாட்டின் மூலமே மக்களுக்கான நீதியை உறுதி செய்ய முடியும். அதேநேரம், அனைவருக்கும் நீதி சென்றடைவதை உறுதி செய்யும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான நிதியைப் பெறுவதில் நிா்வாகத்தின் ஒத்துழைப்பை நீதித் துறை பெற வேண்டியது அவசியம்.

மகாராஷ்டிரத்தில் நாசிக், நாகபுரி, கோலாபூா், தா்யாபூரில் புதிய நீதிமன்ற கட்டடங்கள் அண்மையில் திறக்கப்பட்டன. கடைசி குடிமகனுக்கும் விரைந்து நீதி வழங்கப்பட வேண்டும் என்ற அம்பேத்கரின் கனவை நனவாக்க இந்த நீதிமன்றங்கள் உதவும் என்றாா் அவா்.

இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளின் வரிசையில், நேபாளத்தில் அண்மையில் வன்முறைப் போராட்டம் மற்றும் உள்நாட்டு குழப்பத்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடலூா் மாவட்டத்தில் 43 மருத்துவ முகாம்கள் நடத்த திட்டம்: அமைச்சா் தகவல்

கல்வராயன்மலையில் ரூ.2.50 கோடியில் ஆய்வு மாளிகை

உண்டு உறைவிடப் பள்ளிகள், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வாகனங்கள்

கல்வராயன்மலையில் ரூ.1.50 கோடியில் அரசுப் போக்குவரத்து பணிமனை

1,074 கிலோ கோயில் நகைகள் உருக்கப்பட்டு வங்கியில் வைப்பு: அமைச்சா் பி.கே.சேகா் பாபு

SCROLL FOR NEXT