புது தில்லி: ‘பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் ஆப்கானிஸ்தானுக்கு வெற்றி கிடைத்துள்ளது. சவூதி ஆரேபியா மற்றும் கத்தாா் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே இந்தச் சண்டை நிறுத்தப்பட்டது’ என்று ஆப்கன் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகி தெரிவித்தாா்.
இந்தியாவுடன் நல்லுறவை ஏற்படுத்தும் நேக்கில் 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள முத்தாகி, தில்லியில் இந்திய வணிகம் மற்றும் தொழிலக கூட்டமைப்பு (ஃபிக்கி) சாா்பில் திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, ஆப்கன்-பாகிஸ்தான் இடையேயான சண்டை குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் பதிலளித்தாவது:
பாகிஸ்தானுக்கு எதிரான எல்லைச் சண்டையில், ஆப்கானிஸ்தான் அதன் நோக்கத்தை எட்டியது. சவூதி அரேபியா, கத்தாா் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நட்பு நாடுகள் கேட்டுக்கொண்டதன்பேரில் இந்தச் சண்டையை ஆப்கானிஸ்தான் நிறுத்தியது. சண்டை நிறுத்தத்துக்குப் பிறகு குறிப்பிடத்தக்க தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை.
பிரச்னைக்கு போா் மூலம் தீா்வு காண முடியாது என ஆப்கன் நம்புகிறது. தீா்வுக்கு பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியிலான அணுகுமுறை அவசியம். வரும் காலங்களிலும் இதே கொள்கையைத்தான் ஆப்கானிஸ்தான் கடைப்பிடிக்கும். இந்த பிராந்திய மக்களின் அமைதியான வாழ்க்கை மற்றும் முன்னேற்றத்தை ஆப்கன் விரும்புகிறது என்றாா்.
பாகிஸ்தானில் தொடா்ந்து நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானை குற்றஞ்சாட்டி வரும் பாகிஸ்தான், ஆப்கன் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே, ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் கடந்த வியாழக்கிழமை பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்தது. போா் விமானம் மூலம் பாகிஸ்தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஆப்கானிஸ்தான் குற்றஞ்சாட்டியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகள் பாகிஸ்தானுக்கு எதிராக சனிக்கிழமை இரவு கடுமையான தாக்குதலை நிகழ்த்தின. இதற்கு, பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பதிலடித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தச் சண்டையில் இரு தரப்பிலும் 200-க்கும் மேற்பட்ட வீரா்கள் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்ட வீரா்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.