வல்சாத்: 50 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட ரயில்வே துறைக்கு தற்போது தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சியில் புத்துயிர் அளிக்கப்படுவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
ரயில்வே பாதுகாப்புப்படையின் 41ஆவது நிறுவன தினத்தையொட்டி குஜராத் மாநிலம் வல்சாத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நம் நாட்டில் கடந்த 50}60 ஆண்டுகளாக ரயில்வே துறை புறக்கணிக்கப்பட்டிருந்தது. தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ரயில்வே துறைக்குப் புத்துயிர் அளிக்கப்படுகிறது. கடந்த 11 ஆண்டுகளில் 35,000 கி.மீ. நீளத்துக்கு ரயில்வே இருப்புப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில்வே வரலாற்றில் இது முன்னெப்போதும் நடந்திராததாகும். இதன் விளைவாக நாட்டில் இன்று அதிக எண்ணிக்கையிலான ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நாடு முழுவதும் 1,300 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் 110 நிலையங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
60,000 கி.மீ. நீள இருப்புப் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. ரயில்வே துறையில் சாதனை அளவாக மேற்கொள்ளப்படும் பணிகளைப் பார்த்து மக்கள் வியக்கின்றனர். இவ்வளவு குறுகிய காலத்தில் மிகப் பெரும்பாலான இருப்புப்பாதைகளை மின்மயமாக்குவது வளர்ந்த நாடுகளில் கூட நடந்ததில்லை.
முதல் இரண்டு நமோ பாரத் ரயில்கள் மூலம் கிடைத்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு நமோ பாரத் ரயில் பெட்டிகளை பெரிய அளவில் உற்பத்தி செய்வதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. ரயில்களுக்கு 3,500 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது 7,000 ரயில் பெட்டிகளுக்கான உற்பத்தி தற்போது நடந்து வருகின்றது. குறைந்த வருமானம் கொண்டவர்கள் மற்றும் நடுத்தர வகுப்பினர் உள்பட சமூகத்தின் அனைத்து சமூகங்களுக்கும் சேவைகளை வழங்குவதில் ரயில்வே கவனம் செலுத்தி
வருகிறது.
1,200 ரயில் பெட்டிகளில் "கவச்' எனப்படும் ரயில் பாதுகாப்பு கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படைக்கு ஆள்தேர்வு நான்கு}ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதற்கு பதிலாக இனி ஆண்டுதோறும் நடத்தப்படும்.
ரயில்வே பாதுகாப்புப் படையின் அனைத்து அதிகாரிகளுக்கும் களப் பணியாளர்களுக்கும் விரைவில் அதிநவீன வாக்கி}டாக்கி சாதனங்கள் வழங்கப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.