உச்ச நீதிமன்றம் 
இந்தியா

லடாக்: பாதுகாப்புக்கு பாதகமாகச் செயல்பட்டதால் வாங்சுக் கைது: உச்சநீதிமன்றத்தில் லே ஆட்சியர் பதில்

"மாநில பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் சோனம் வாங்சுக்கை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது' என்று உச்சநீதிமன்றத்தில் லே மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

"மாநில பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் சோனம் வாங்சுக்கை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது' என்று உச்சநீதிமன்றத்தில் லே மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

அதுபோல, "சோனம் வாங்சுக் தனிமைச் சிறையில் அடைக்கப்படவில்லை. பார்வையாளர்களைச் சந்திப்பது உள்பட அனைத்து உரிமைகளும் அவருக்கு உள்ளது' என்று ஜோத்பூர் சிறை கண்காணிப்பாளர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

அரசமைப்புச் சட்டத்தின் 6-ஆவது அட்டவணையின் கீழ் லடாக்கை சேர்க்க வேண்டும்; லடாக்குக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஏற்பட்ட வன்முறையில் போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறையில் காவல் துறையினர் 40 பேர் உள்பட சுமார் 90 பேர் காயமடைந்தனர்.

வாங்சுக்கின் ஆத்திரமூட்டும் பேச்சுகளால் தூண்டப்பட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியது. இதையடுத்து, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வாங்சுக் கைது செய்யப்பட்டார். தற்போது ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே.அங்மோ ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் லடாக் யூனியன் பிரதேச நிர்வாகத்துக்கு நோடடீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

அதன்படி, லே மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜோத்பூர் சிறை கண்காணிப்பாளர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

லே மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த பதில் மனுவில், "மாநில பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் சோனம் வாங்சுக்கை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

போதிய ஆதாரங்கள் பரிசீலித்ததன் அடிப்படையில்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ள தகவலும், ஜோத்பூர் மத்திய சிறைக்கும் மாற்றம் செய்யப்பட உள்ளத தகவலும் முன்கூட்டியே சோனம் வாங்சுக்குக்கு தெரிவிக்கப்பட்டது. அவரின் மனைவி கீதாஞ்சலி அங்மோக்கும் தொலைபேசி வழியில் உடனடியாக தெரிவிக்கப்பட்டது. இதை அவரே தனது மனுவிலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேசிய பாதுகாப்புச் சட்டப் பிரிவு 10-இன் கீழ் எந்தவொரு பிரதிநிதித்துவத்தையும் ஆலோசனை வாரியத்துக்கோ அல்லது உரிய அதிகாரிகளுக்கோ சோனம் வாங்சுக் சமர்ப்பிக்கவில்லை. மாறாக, குடியரசுத் தலைவருக்கு அவர் கடிதம் எழுதினார். இந்த கடித நகல் யூனியன் பிரதேச நிர்வாகத்திடமும், ஆலோசனை வாரியத்திடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.

ஜோத்பூர் சிறை கண்காணிப்பாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், "சோனம் வாங்சுக் தனிமைச் சிறையில் அடைக்கப்படவில்லை. பார்வையாளர்களை சந்தித்தல் உள்பட அனைத்து உரிமைகளும் அவருக்கு உள்ளது. அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். தினமும் வழக்கமான உணவை எடுத்துக்கொள்கிறார். சிறை விதிகளின் கீழ் பார்வையாளர்களைச் சந்திக்கும் உரிமை அவருக்கு உள்ளது. அதே நேரம், பாதுகாப்பு காரணங்களுக்காக பார்வையாளர்களை அவர் சந்திக்கும்போது, உள்ளூர் காவலர் ஒருவர் அங்கு இடம்பெறுவது உறுதிப்படுத்தப்படும்' என்று தெரிவிக்கப்பட்டது.

இன்று விசாரணை: இதனிடையே வாங்சுக் மனைவி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நேரமின்மையைக் காரணம் காட்டி மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு (அக்.15) நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை!

சக்தித் திருமகன் ஓடிடி தேதி!

மகாபாரதத்தில் கர்ணனாக நடித்த பங்கஜ் தீர் காலமானார்!

வியாபார வெற்றிக்கு 1000 வழிகள்

வெற்றியின் வரைபடம்

SCROLL FOR NEXT