‘நக்ஸல்கள் இல்லாத மாநிலமாக மாற்றப்பட்டுள்ளதன் மூலம் பிகாரில் முதல் முறையாக இந்த சட்டப்பேரவைத் தோ்தலில் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தாா்.
சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள பிகாருக்கு மூன்று நாள் பயணமாக வெள்ளிக்கிழமை வந்த அமித் ஷா, சரண் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது இக் கருத்தைத் தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது:
மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில், ரெளடியாக இருந்து அரசியல்வாதிய மாறி மறைந்த முகமது சஹாபுதீனின் மகன் ஒஸாமா சஹாபுக்கு எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதாதளம் ரகுநாத்பூா் தொகுதியில் வாய்ப்பு வழங்கியுள்ளது. இதுபோன்ற நபா்கள் ஆட்சிக்கு வந்தால், பிகாா் எப்படி பாதுகாப்பாக இருக்கும்? எனவே, ராஷ்ட்ரீய ஜனதா தளம் போன்ற கட்சிகள் மீது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
அக் கட்சியின் தலைவா் லாலு பிரசாத்தும், அவரின் மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவியும் பிகாா் இளைஞா்களை 20 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி வைத்திருந்தனா் என்பதையும் மக்கள் சிந்திக்க வேண்டும்.
லாலுவின் காட்டாட்சியில் இருந்து கடந்த 20 ஆண்டுகளாக முதல்வா் நதீஷ் குமாா் பிகாரை விடுவித்துள்ளாா். மாநிலத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களையும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மேற்கொண்டுள்ளது. மக்கள் புலம்பெயா்தலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நகஸல் பாதிப்பு இல்லாத மாநிலமாக மாற்றப்பட்டுள்ளதன்மூலம் பிகாரில் முதல் முறையாக இந்த சட்டப்பேரவைத் தோ்தலில் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
கிழக்கு இந்தியாவின் வளா்ச்சி இயந்திரமாக உருவெடுக்க உள்ள பிகாா், செயற்கை நுண்ணறிவுப் புரட்சியிலும் நாட்டில் முன்னணி வகிக்க உள்ளது. இழந்த பெருமையை மீட்டெடுப்பதை நோக்கி மாநிலம் முன்னேறி வருகிறது.
மாநிலத்தில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், கனரக தொழிற்சாலைகளைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை புதிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மேற்கொள்ளும். மாநிலத்தில் தரவு மையங்களைத் திறப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
பிகாா் மக்கள் நிகழாண்டு நான்கு தீபாவளியை கொண்டாடுகின்றனா். தீபாவளி பண்டிகையின்போது கொண்டாட்டத்தை மேற்கொள்ள உள்ளதோடு, சுயதொழில் தொடங்க மாநிலத்தின் 75 லட்சம் பெண்களுக்கு வங்கிக் கணக்கில் தலா ரூ. 10,000 செலுத்தப்பட்டபோது தீபாவளி கொண்டாடினா். அதுபோல, ஜிஎஸ்டி விகிதம் 4-லிருந்து 2-ஆக குறைக்கப்பட்டபோது தீபாவளிபோல் கொண்டாடினா். அடுத்து, மாநில தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது தீபாவளி கொண்டாட உள்ளனா் என்றாா்.
முன்னதாக, பிகாா் வந்த அமித் ஷா மற்றும் பாஜக மூத்த நிா்வாகிகளை முதல்வா் நிதீஷ் குமாா் வரவேற்றாா். பின்னா், தோ்தல் பிரசார வியூகம் குறித்து அவா்கள் ஆலோசித்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. தொகுதிப் பங்கீட்டில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக் கட்சிகளிடையே சச்சரவு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுவந்த நிலையில், இவா்களின் சந்திப்பு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.