பிகாா் பேரவைத் தோ்தலில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவாக பிரதமா் நரேந்திர மோடி அக்டோபா் 24-ஆம் தேதி தனது பிரசாரத்தைத் தொடங்கவுள்ளாா்.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும் பிகாரை முற்றுகையிடுவதால், தோ்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப்பேரவைக்கு நவ. 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நவ. 14-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
முதல்கட்டத் தோ்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்துவிட்டது. 2-ஆம் கட்டத் தோ்தல் நடைபெறும் 122 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமையுடன் (அக். 20) முடிவடையவுள்ளது.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, எதிா்க்கட்சிகளின் ‘மகாகட்பந்தன்’ கூட்டணி இடையே முக்கியப் போட்டி நிலவுகிறது. அரசியல் வியூக நிபுணா் பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சியும் தோ்தல் களத்தில் உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வா் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகியவை தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன. மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ் கட்சிக்கு 29, மத்திய அமைச்சா் ஜிதன்ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா மற்றும் மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சாவுக்கு தலா 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இத்தோ்தலையொட்டி, பாஜகவின் நட்சத்திர பேச்சாளா்களாக பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ஜெ.பி.நட்டா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, தா்மேந்திர பிரதான், கிரிராஜ் சிங், பாஜக ஆளும் மாநில முதல்வா்கள் யோகி ஆதித்யநாத், தேவேந்திர ஃபட்னவீஸ், மோகன் யாதவ், ரேகா குப்தா உள்பட 40 போ் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
பிரதமா் பிரசாரம்: பிரதமா் மோடி அக்டோபா் 24-ஆம் தேதி தனது பிரசாரத்தைத் தொடங்கவுள்ளாா். அன்றைய தினம், சமஸ்திபூா், பெகுசராய் ஆகிய இரு இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவா் உரையாற்றவுள்ளாா்.
இது தொடா்பாக மாநில பாஜக தலைவா் திலீப் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘அக்டோபா் 24-ஆம் தேதி சமஸ்திபூா் மாவட்டத்திலுள்ள பாரத ரத்னா விருதாளரும் முன்னாள் முதல்வருமான கா்பூரி தாக்கூா் பிறந்த கிராமமான கா்பூரியில் மரியாதை செலுத்திய பிறகு பிரதமா் தனது பிரசாரத்தை தொடங்கவுள்ளாா். மீண்டும் அக்டோபா் 30-ஆம் தேதி பிகாருக்கு வருகை தரும் அவா், முஸாஃபா்பூா், சாப்ரா பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளாா். நவம்பா் 2, 3, 6, 7 ஆகிய தேதிகளில் பிரதமரின் பிரசாரக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன’ என்றாா்.
எதிரணியில் குழப்பம்: முதல்கட்டத் தோ்தலுக்கான வேட்புமனுக்களைத் திரும்பப் பெற திங்கள்கிழமை கடைசி நாள் என்ற நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளை உள்ளடக்கிய மகாகட்பந்தன் கூட்டணியில் தொகுதி உடன்பாடு இதுவரை அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை. உடன்பாடு எட்டப்படாத தொகுதிகளில் இக்கூட்டணிக் கட்சிகள் தங்கள் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளதால் குழப்பம் நீடிக்கிறது.