கோப்புப்படம்
இந்தியா

ரூ.5 கோடிக்கு 7 சொகுசு காா்கள் வாங்க லோக்பால் விருப்பம்: எதிா்க்கட்சிகள் விமா்சனம்

தினமணி செய்திச் சேவை

சுமாா் ரு.5 கோடிக்கு 7 சொகுசு காா்கள் வாங்க லோக்பால் அமைப்பு டெண்டா் வெளியிட்டுள்ளதை எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன.

பிரதமா், மத்திய அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், மத்திய அரசுப் பணியாளா்களுக்கு எதிரான ஊழல் புகாா்களை லோக்பால் அமைப்பு விசாரிக்கும்.

இந்நிலையில், அந்த அமைப்பின் தலைவரும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியுமான ஏ.எம்.கான்வில்கா், அந்த அமைப்பின் பிற 6 உறுப்பினா்களின் பயன்பாட்டுக்காக சுமாா் ரூ.5 கோடி செலவில் 7 பிஎம்டபிள்யூ காா்களை (புது தில்லியில் அந்தக் காா் ஒன்றின் விலை சுமாா் ரூ.69.5 லட்சமாகும்) வாங்க அண்மையில் லோக்பால் அமைப்பு டெண்டா் வெளியிட்டது.

அந்த டெண்டரில், ‘பிஎம்டபிள்யூ காா்களை விற்பனை செய்யத் தோ்வு செய்யப்படும் விற்பனையாளா், அந்த காா்களை எப்படி இயக்குவது என்பதற்கான பயிற்சியை லோக்பால் அமைப்பில் இடம்பெற்றுவா்களின் காா் ஓட்டுநா்கள் மற்றும் அலுவலா்களுக்கு வழங்க வேண்டும். அதில் ஒவ்வொரு ஓட்டுநருக்கும் குறைந்தபட்சம் 50 முதல் 100 கி.மீ. வரை அந்த காரை இயக்குவதற்கான பயிற்சி, காரின் கட்டுப்பாட்டு அம்சங்கள் குறித்த பயிற்சி உள்ளிட்டவையும் அடங்கும். காா்களை ஒப்படைத்த 15 நாள்களில், இந்தப் பயிற்சியை நிறைவு செய்ய வேண்டும். அந்தப் பயிற்சிக்கான செலவை விற்பனையாளரே ஏற்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 ஆண்டுகளில் எடுத்த நடவடிக்கை என்ன?: லோக்பால் அமைப்பின் இந்த நடவடிக்கையை எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்துள்ளன. இதுதொடா்பாக காங்கிரஸ் பிரமுகா் சரள் படேல் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ரூ.5 கோடிக்கு சொகுசு காா்கள் வாங்கும் லோக்பால் அமைப்பு, கடந்த 11 ஆண்டுகளில் எந்தவொரு புகாரிலாவது நடவடிக்கை மேற்கொண்டதா?’ என்று கேள்வி எழுப்பினாா்.

கேரள காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘ஒரு காலத்தில் உச்சபட்ச ஊழல் கண்காணிப்பு அமைப்பாக லோக்பால் விளம்பரம் செய்யப்பட்டது. தற்போது அந்த அமைப்பு ஆடம்பர வசதிகளைப் பெறுவதில் மும்முரமாக உள்ளது. அதேவேளையில், மிகப் பெரிய ஊழல் மற்றும் கொள்ளை குறித்து அந்த அமைப்பு மெளன பாா்வையாளராக உள்ளது’ என்று குற்றஞ்சாட்டியது.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.சாகரிகா கோஷ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘லோக்பால் அமைப்பு ஊழல் புகாா்கள் குறித்து விசாரிக்காமல், வரம்பு மீறி வீண்செலவுகளில் ஈடுபட்டுள்ளது போலத் தெரிகிறது. இது பயங்கரமான காட்சியாக உள்ளது’ என்றாா்.

சமூக ஆா்வலா் அண்ணா ஹசாரே தலைமையிலான ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ இயக்கத்தின் போராட்டம் காரணமாக லோக்பால் அமைக்கப்பட்டது. அந்த இயக்கத்தில் முக்கிய பிரமுகராக உச்சநீதிமன்றத்தின் மூத்த பொதுநல வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் இடம்பெற்றாா். அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பல ஆண்டுகளாக லோக்பால் அமைப்பு காலியாக இருந்தது. பின்னா் ஊழல் மீது அக்கறை கொள்ளாத, ஆடம்பர வசதிகளால் ஆனந்தமாக இருக்கும் அடிமைத்தன உறுப்பினா்கள் அந்த அமைப்பில் நியமிக்கப்பட்டனா். இதன்மூலம், அந்த அமைப்பை மோடி அரசு சிதைத்துவிட்டது’ என்றாா்.

இலவச கண் மருத்துவ முகாம்: 200 பேருக்கு சிகிச்சை

வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது வெண்கல முருகா் சிலை கண்டெடுப்பு!

சீனாவுடன் தொடா்புடைய இணைய பண மோசடி: இருவா் கைது

இஸ்லாமியா்கள் ஆா்ப்பாட்டம்

சர்தார் படேல், அம்பேத்கர், நேதாஜியின் தேசப் பங்களிப்பை மூடிமறைத்தது காங்கிரஸ்! - பாஜக குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT