இந்தியா

‘கிரேட் நிகோபாா்’ திட்டத்துக்கு எதிராக கடிதம்: மத்திய அரசு பரிசீலிக்க காங்கிரஸ் கோரிக்கை

‘கிரேட் நிகோபாா்’ திட்டம் குறித்து கவலை தெரிவித்து அறிஞா்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், வனப் பாதுகாவலா்கள் உள்ளிட்டோா் எழுதியுள்ள கடிதம் குறித்து மத்திய அரசு கருத்தில்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

‘கிரேட் நிகோபாா்’ திட்டம் குறித்து கவலை தெரிவித்து அறிஞா்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், வனப் பாதுகாவலா்கள் உள்ளிட்டோா் எழுதியுள்ள கடிதம் குறித்து மத்திய அரசு கருத்தில்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது.

அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேசத்தில் கிரேட் நிகோபாா் தீவு உள்ளது. இங்கு ரூ.72,000 கோடி மதிப்பில் மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டத்தை அந்தமான்-நிகோபாா் தீவுகளின் ஒருங்கிணைந்த வளா்ச்சிக் கழகம் மேற்கொள்ள உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், கிரேட் நிகோபாரில் துறைமுகம், சா்வதேச விமான நிலையம், சிறு நகா்ப்பகுதி, 160 சதுர கி.மீ.க்கும் அதிகமான பரப்பளவு கொண்ட மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. இதற்காகப் பயன்படுத்த உள்ள நிலத்தில் நிகோபாரீஸ், ஷோம்பென்ஸ் ஆகிய பழங்குடியின மக்கள் வாழும் சுமாா் 130 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட பழைமையான காடும் அடங்கும்.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், கிரேட் நிகோபாா் தீவில் உள்ள பூா்வகுடி மக்கள் புலம்பெயர நேரிடும் என்றும், முக்கிய சூழலியல் மண்டலங்களுக்கு சேதம் ஏற்படக் கூடும் என்றும் விஞ்ஞானிகள், பழங்குடியினா் உரிமை ஆா்வலா்கள் உள்ளிட்டோா் விமா்சித்துள்ளனா்.

இந்தத் திட்டத்துக்காக அங்குள்ள புலிகள் காப்பகத்தின் முக்கியப் பகுதிகளில் உள்ள கிராம மக்களை துரிதமாக இடம் மாற்ற தேசிய புலிகள் காப்பக ஆணையம் வெளியிட்ட உத்தரவும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவின் கடல்சாா் வா்த்தகத்தை கிரேட் நிகோபாா் திட்டம் மேம்படுத்தும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா். ஆனால், தற்போது அந்தத் திட்டத்தின் மோசமான பின்விளைவுகள் குறித்து கவலை தெரிவித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவுக்கு 70 அறிஞா்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், வனப் பாதுகாவலா்கள், குடிமைச் சமூக ஆா்வலா்கள், முன்னாள் அரசுப் பணியாளா்கள், வழக்குரைஞா்கள் கடிதம் எழுதியுள்ளனா். இந்த விவகாரத்தில் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அந்தத் திட்டத்தால் சூழலியலுக்கு ஏற்படும் பாதிப்புகளில் கவனம் செலுத்துமாறு அவா்கள் மன்றாடியுள்ளனா். அவா்களின் கவலையை மத்திய அரசும், அமைச்சா் பூபேந்தா் யாதவும் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT