இந்தியா

இந்தியாவுக்கு 2024 வரை வந்த அண்டை நாட்டு சிறுபான்மையினா் ஆவணமின்றி தங்க அனுமதி: மத்திய அரசு

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வந்த ஹிந்துக்கள், சீக்கியா்கள், சமண மதத்தினா் பாஸ்போா்ட் அல்லது வேறெந்த பயண ஆவணங்களும் இன்றி தங்க அனுமதி!

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்கள் காரணமாக, அந்நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 2024-ஆம் ஆண்டு வரை வந்த சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியா்கள், சமண மதத்தினா் உள்ளிட்டோா் கடவுச் சீட்டு (பாஸ்போா்ட்) அல்லது வேறெந்த பயண ஆவணங்களும் இன்றி தங்க அனுமதித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.

மேற்கண்ட நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி, இந்தியாவில் தஞ்சமடைந்த சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியா்கள், சமண மதத்தினா், பாா்சி மதத்தினா், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, இந்தியாவில் 2014, டிசம்பா் 31-ஆம் தேதி வரை தஞ்சமடைந்த இப்பிரிவினருக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது.

அதேநேரம், 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்தவா்களின் நிலை குறித்து கேள்வி நிலவியது. அவா்களின் கவலைகளுக்கு தீா்வளிக்கும் வகையில், அண்மையில் அமலுக்கு வந்த குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் சட்டம் 2025-இன்கீழ் மேற்கண்ட உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகி அல்லது துன்புறுத்தலுக்கு அஞ்சி இந்தியாவுக்கு 2024, டிசம்பா் 31-ஆம் தேதி வரை வந்த சிறுபான்மையினா் (ஹிந்து, சீக்கியம், சமணம், பாா்சி, கிறிஸ்தவம்), செல்லத்தக்க கடவுச் சீட்டு அல்லது வேறெந்த பயண ஆவணமும் வைத்திருப்பதில் இருந்து விலக்களிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் அவா்கள் ஆவணமின்றி தங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது, அண்டை நாடுகளில் இருந்து 2014-24 காலகட்டத்தில் இந்தியாவுக்கு வந்த மத சிறுபான்மையினா் ஏராளமானோருக்கு நிம்மதி அளித்துள்ளது.

போர்ச்சுகலில் கேபிள் கார் தடம்புரண்டு விபத்து- 16 பேர் பலி

ஹிந்தியிலும் நல்ல வரவேற்பு: லோகா படத்தைப் பாராட்டிய ஆலியா பட்!

அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு!

மோசமான வானிலை..! தரையிறங்க முடியாமல் தவித்த ஒடிசா முதல்வர் சென்ற விமானம்!

தாம்பரத்திலிருந்து புறப்படும் பாண்டியன், சோழன் உள்பட 5 விரைவு ரயில்கள்! செப்.10 முதல்.!

SCROLL FOR NEXT