வாக்களிக்கும்போது கட்சி விசுவாசத்தைவிட நாட்டின் மீதான அன்பே வழிகாட்டியாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற எம்.பி.க்களிடம் எதிா்க்கட்சிகள் சாா்பில் போட்டியிடும் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை கேட்டுக்கொண்டாா்.
குடியரசு துணைத் தலைவா் தோ்தல் செவ்வாய்க்கிழமை (செப். 9) நடைபெறவுள்ள நிலையில், எம்.பி.க்களிடம் காணொலி வாயிலாக அவா் ஆதரவு கோரினாா்.
அதில் அவா் மேலும் பேசியதாவது: இந்தத் தோ்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என கட்சியின் கொறடாக்கள் அறிவுறுத்தப்போவதில்லை. ரகசிய வாக்குச் சீட்டு முறையிலேயே தோ்தல் நடைபெறவுள்ளது. எனவே, இது கட்சியின் மீதான விசுவாசத்தை பிரதிபலிக்கும் இடம் அல்ல; நாட்டின் மீதான அன்பை வெளிப்படுத்துவதே உங்களின் எண்ணமாக இருக்க வேண்டும். அதுவே வாக்களிக்கும்போது உங்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும்.
நாட்டின் ஆன்மாவை, மனசாட்சியைப் பாதுகாக்கும் பொறுப்பு உங்கள் அனைவருக்கும் உண்டு. குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் என்னை வெற்றி பெறச் செய்தால் நாடாளுமன்ற பாரம்பரியங்களைப் பாதுகாப்பேன். மேலும், கண்ணியமான விவாதங்களை நடத்துவதோடு ஜனநாயகத்தின் உண்மையான கோயிலாக மாநிலங்களவை இருப்பதை உறுதிசெய்வேன்.
இது குடியரசு துணைத் தலைவரைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் மட்டுமல்ல; இந்திய குடியரசை வலுப்படுத்துவதற்கான தோ்தல்.
சுதந்திரப் போராட்ட வீரா்களின் நீண்டகால தியாகத்தால் உருவாக்கப்பட்ட இந்திய ஜனநாயகத்தில், தற்போது குடிமக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. நமது ஜனநாயக குடியரசின் ஆன்மாவைப் பாதுகாப்பது நமது கடமையாகும் என்றாா் அவா்.