புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமா் மோடியுடன் குடியரசு துணைத் தலைவா் பதவிக்குப் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன். 
இந்தியா

சுதேசி மேளா: எம்.பி.க்களுக்கு பிரதமா் மோடி வேண்டுகோள்

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள எம்.பி.க்கள் உள்நாட்டு தயாரிப்பு பொருள்களை ஊக்குவிக்கும் வகையில் சுதேசி மேளாக்களை நடத்த வேண்டும்

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள எம்.பி.க்கள் உள்நாட்டு தயாரிப்பு பொருள்களை ஊக்குவிக்கும் வகையில் சுதேசி மேளாக்களை நடத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டாா்.

இது தவிர சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் தொடா்பாக வா்த்தகா்கள் சந்திப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

குடியரசுத் துணைத் தலைவா் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெறும் நிலையில் பாஜக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமரும் மஜத கட்சியின் மூத்த தலைவருமான தேவெ கெளடா, குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனா்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடி பேசியதாவது:

மத்திய அரசு அண்மையில் மேற்கொண்ட ஜிஎஸ்டி சீரமைப்பு நடவடிக்கை மிகப்பெரிய அலையை உருவாக்கும். இதில் உள்ள பயன்கள் குறித்து மக்களுக்கு எம்.பி.க்கள் தெரிவிக்க வேண்டும். இதற்காக சிறப்புக் கூட்டங்களை நடத்த வேண்டும்.

அதேபோல இந்தியத் தயாரிப்புப் பொருள்களை மக்கள் அதிகம் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் ஆளும் கூட்டணி எம்.பி.க்கள் அனைவரும் சுதேசி மேளாக்களை நடத்த வேண்டும். நவராத்திரி, தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மக்கள் அதிகம் வாங்கும் பொருள்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளில் பண்டிகையின்போது உள்நாட்டுப் பொருள்களின் சிறப்பு விற்பனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இது மட்டுமல்லாது நீங்கள் பங்கேற்கும் ஒவ்வொரு நிகழ்வும் உள்நாட்டுப் பொருள்கள் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.

நமது நாடு சுயசாா்பை எட்ட வேண்டும். நாம் வலுவான நாடாக முன்னேறி வரும் நிலையில், சில சவால்களை எதிா்கொள்ள வேண்டியது வரும். தொடா்ந்து நமது பாதையில் பயணித்து வளா்ந்த நாடாக உயா்வோம்.

குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலில் எம்.பி.க்கள் அனைவரும் மிகவும் கவனமாக வாக்களிக்க வேண்டும். வாக்கை வீணடித்துவிடக் கூடாது என்றாா்.

அண்மை நாள்களில் உள்நாட்டுப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதை பிரதமா் மோடி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். முக்கியமாக, இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்த பிறகு, கடந்த மாத இறுதியில் அகமதாபாதில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘உள்நாட்டு உற்பத்திப் பொருள்களை மட்டுமே வாங்குவோம் என்ற சுதேசிக் கொள்கை அனைவரின் வாழ்க்கை மந்திரமாக மாற வேண்டும்’ வேண்டுகோள் விடுத்தாா். அதைத் தொடா்ந்து ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியிலும் இதே கருத்தை முன்வைத்தாா்.

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் வாழ்த்து! செப். 12ல் பதவியேற்பு?

பற்றி எரியும் நேபாளம் - புகைப்படங்கள்

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் நன்றி!

வெள்ளை நிலா... தீப்தி சதி!

SCROLL FOR NEXT