நேபாளத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் இளைஞர்கள், மோடியைப் போன்ற தலைவர் வேண்டும் என்று கூறும் விடியோவை பாஜக பகிர்ந்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை விமர்சிக்கும் வகையில், பாஜக தலைவர் அமித் மால்வியா, ஒரு விடியோவை பகிர்ந்துள்ளார். அந்த விடியோவில், நேபாளத்தில் போராடி வரும் இளைஞர்களில் ஒருவர், சர்மா ஓலி போன்ற பிரதமர் வேண்டாம், நாட்டு மக்களைப் பற்றி நினைக்கும் பிரதமர் மோடி போன்ற தலைவர் வேண்டும் என்று கூறுவது பதிவாகியிருக்கிறது.
ராகுல் காந்தியை இளம் தலைமுறையைப் போல காட்ட காங்கிரஸ் ரீல்ஸ்களை வெளியிட ஏராளமான பணத்தை செலவிட்டு வருகிறது. அவர் வாகனம் ஓட்டுவது போல, பயிற்சிகள் செய்வது போல விடியோக்களை வெளியிடுகிறது.
ஆனால், உண்மையில் ஜென் ஸி தலைமுறையினர் என்றால் அது நேபாள இளைஞர்கள்தான். இவர்கள் இந்தியாவை விரும்புகிறார்கள். இந்திய பிரதமர் மோடி போல ஒரு தலைவர் வேண்டும் என விரும்புகிறார்கள். தொலைநோக்குப் பார்வை, செயல்பாடுகள், இலக்கை அடைவதற்கான உறுதி போன்றவற்றைக் கொண்ட தலைவரை எதிர்பார்க்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர் ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்ட விடியோவை இணைத்துள்ளார். அந்த செய்தி நிறுவனம் நேபாள இளைஞர் ஒருவரிடம் கேட்கும்போது, நேபாள நாட்டுக்கு இந்திய பிரதமர் மோடியைப் போன்ற ஒரு தலைவர் வேண்டும் என்று கூறுவது பதிவாகியிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி போன்ற தலைவரின் ஆட்சியின் கீழ் நேபாளம் வர வேண்டும். அவ்வாறு நடந்தால், நாடு இப்போதிருக்கும் நிலையில் இருக்காது, முன்னேற்றப் பாதையில் செல்லும் என்று அவர் கூறுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேபாளத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக ஜென் ஸி எனப்படும் இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்த நிலையில், அந்நாட்டுப் பிரதமர் சர்மா ஓலி நேற்று தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து அந்நாட்டில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், பாஜகவினர் இந்த விடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.