இயன்முறை(பிசியோதெரபி) மருத்துவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் 'டாக்டர்' எனக் குறிப்பிடலாம் என்று கூறி மத்திய அரசு மீண்டும் தனது முடிவை மாற்றியுள்ளது.
அதன்படி, கடந்த செப். 9 ஆம் தேதி பிசியோதெரபி மருத்துவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் 'டாக்டர்' எனக் குறிப்பிடக் கூடாது என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.
நாட்டில் பிசியோதெரபி மருத்துவர்கள் 'டாக்டர்' என தங்கள் பெயருக்கு முன்னால் பயன்படுத்தலாம் என்று கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு முதலில் அறிவித்தது.
இதற்கு எதிராக மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பயிற்சி பெறும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் பிற அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியது.
அதன்படி கடந்த செப். 9 ஆம் தேதி பிசியோதெரபி பயின்றவர்களை 'டாக்டர்' என குறிப்பிடக் கூடாது என்று உத்தரவிட்டது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள சுகாதார சேவைகள் இயக்குநரகம் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்டது.
"பிசியோதெரபிஸ்டுகள் மருத்துவர்களாக பயிற்சி பெறவில்லை,. எனவே அவர்கள், தங்களை டாக்டர் என்று கூறக் கூடாது, தங்கள் பெயருக்கு முன்னால் 'டாக்டர்' என பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இது நோயாளிகளையும் மக்களையும் தவறாக வழிநடத்தும். இது போலி மருத்துவத்திற்கு வழிவகுக்கும்" என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் செப். 10 அன்று மத்திய அரசு இந்த உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுவதால் உத்தரவு திரும்பப் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளது.
அதன்படி, பிசியோதெரபி நிபுணர்கள் 'டாக்டர்' என தங்கள் பெயருடன் சேர்த்துக்கொள்ளலாம். அறிவிப்பு கடிதத்தின்படி இந்த விவகாரம் தற்போது பரிசீலனையில் உள்ளதாகவே கருதப்படுகிறது.
இதுபற்றி இந்திய மருத்துவ சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் திலீப் பனுஷாலி கூறுகியில், 'மத்திய அரசு 8 மணி நேரத்தில் தனது முடிவை மாற்றியுள்ளது. இது ஒரு கொடூரமான நகைச்சுவை' என்று கூறினார்.
மேலும், ' நாங்கள் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகவிருக்கிறோம். எங்களுக்கு வேறு வழியில்லை. தமிழ்நாடு மற்றும் கேரள உயர் நீதிமன்றங்கள், பிசியோதெரபிஸ்டுகள் தங்கள் பெயர்களில் 'டாக்டர்' என பயன்படுத்தக் கூடாது என ஏற்கனவே உத்தரவுகளை பிறப்பித்துள்ளன" என்று கூறினார்.
மத்திய அரசு இந்த விவகாரத்தில் தனது முடிவுகளை தொடர்ந்து மாற்றிக் கொண்டிருப்பது மருத்துவர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட்டுகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.