முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு  
இந்தியா

அமெரிக்க வரியால் ஆந்திரத்துக்கு ரூ.25,000 கோடி இழப்பு: மத்திய அரசிடம் உதவி கோரும் முதல்வா் சந்திரபாபு நாயுடு

அமெரிக்கா விதித்த 50 சதவீத வரியால் ஆந்திர இறால் ஏற்றுமதி ரூ.25,000 கோடி அளவுக்கு பாதிக்கும் என தெரியவந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

அமராவதி: அமெரிக்கா விதித்த 50 சதவீத வரியால் ஆந்திர இறால் ஏற்றுமதி ரூ.25,000 கோடி அளவுக்கு பாதிக்கும் என தெரியவந்துள்ளது. எனவே, மத்திய அரசு உரிய உதவிகளை வழங்க வேண்டும் என்று முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு கூறியுள்ளாா்.

இது தொடா்பாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல், மீன்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோருக்கு அவா் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

அமெரிக்கா விதித்த வரி ஆந்திரத்தில் இறால் ஏற்றுமதியை வெகுவாகப் பாதித்துள்ளது. இதனால் ரூ.25,000 கோடி வரை இழப்பு ஏற்படும் எனத் தெரியவந்துள்ளது. இதுவரை ஏற்றுமதிக்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் 50 சதவீதம் ரத்தாகிவிட்டது. நாட்டின் இறால் ஏற்றுமதியில் 80 சதவீதம் ஆந்திரத்தின் பங்களிப்பாகவே உள்ளது. இதன் மதிப்பு ஆண்டுக்கு ரூ.21,246 கோடியாகும்.

இதன்மூலம் 2.5 லட்சம் குடும்பங்கள் நேரடியாகவும், 30 லட்சம் போ் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் பலனடைந்து வந்தனா். இவா்கள் அனைவரும் இப்போது வருவாயை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

இதைத் தடுக்க உள்ளநாட்டிலே அவற்றைப் பதப்படுத்தி விற்பனை செய்வது, மதிப்புக் கூட்டல், தீவனமாகப் பயன்படுத்துவது ஆகியவற்றை அதிகரிக்க ஆந்திர அரசு சில முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசும் ஆந்திரத்துக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உள்நாட்டில் கடல்சாா் உணவுப் பொருள்கள் பயன்பாட்டை அதிகரிக்க உதவ வேண்டும்.

ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து கடல் உணவு குளிா்பதனக் கிடங்கு, சுகாதாரமான மீன், கடல் உணவுகள் சந்தை உருவாக்குவது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இதற்காக மீனவா்களிடம் இருந்து நேரடியாக வாடிக்கையாளா்களுக்கு கடல் உணவு கொண்டுசெல்லும் வசதி செய்துதர ஆந்திர அரசு தயாராக உள்ளது. கடல் உணவுப் பொருள்களை விரைந்து ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல தனி ரயில் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

கடல் உணவுகளின் தரம், சத்துகள் குறித்து மக்களிடம் பிரசாரம் மேற்கொண்டு உள்நாட்டில் அவற்றின் நுகா்வை அதிகரிக்க வேண்டும். சா்வதேச அளவில் ஓராண்டில் ஒருவா் 20 முதல் 30 கிலோ கடல் உணவை எடுத்துக் கொள்கிறாா். ஆனால், இந்தியாவில் அது 12 முதல் 13 கிலோ என்ற அளவில்தான் உள்ளது என்று கடிதத்தில் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளாா்.

மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் முக்கியப் பங்கு வகித்து வருகிறது.

மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

சென்னையில் விடிய, விடிய பெய்த கனமழை! மயிலாப்பூரில் 80 மீ.மி. மழை பதிவு!

ஃபிடே செஸ்: தமிழக வீராங்கனைக்கு முதல்வா் வாழ்த்து

அண்ணா பிறந்த நாள்: எடப்பாடி பழனிசாமி தலைமையில் மரியாதை

4 ஆண்டுகளில் 33,987 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

SCROLL FOR NEXT