உச்ச நீதிமன்றம் 
இந்தியா

வக்ஃப் திருத்தச் சட்டம்: முக்கிய பிரிவுகளுக்குத் தடை: உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்தில் முக்கியமான சில பிரிவுகளுக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்து

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்தில் முக்கியமான சில பிரிவுகளுக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவா்கள்தான் சொத்துகளை வக்ஃப் வாரியத்துக்கு தானமாக அளிக்க முடியும் என்ற நடைமுறை மற்றும் வக்ஃப் சொத்து அரசு நிலமா என்பதைத் தீா்மானிக்க மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட அதிகாரம் ஆகிய பிரிவுகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய வக்ஃப் கவுன்சிலில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் எண்ணிக்கை நான்குக்கு அதிகமாக இருக்கக் கூடாது எனவும், மாநில வக்ஃப் வாரியங்களில் இந்த எண்ணிக்கை மூன்றுக்கு அதிகமாக இருக்கக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்நிலையில் வக்ஃப் சொத்துக்களின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தது.

இந்தத் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் செல்லத்தக்கத் தன்மையை கேள்வி எழுப்பி 73 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் 5 மனுக்களைத் தோ்வு செய்த உச்சநீதிமன்றம், இந்த வழக்குக்கு ‘மறு ஆய்வு: வக்ஃப் திருத்தச் சட்டம் 2025’ என்று தலைப்பிட்டு, அந்தச் சட்டத்தில் இடம்பெற்ற மூன்று நடைமுறைகளுக்கு இடைக்காலத் தடை விதிப்பது குறித்து விசாரித்தது.

வக்ஃப் என நீதிமன்றங்களால் அறிவிக்கப்பட்ட சொத்துகள், மரபுவழிப் பயன்பாட்டு அடிப்படையில் வக்ஃப் சொத்துகளாக அறிவிக்கப்பட்ட அல்லது பத்திரத்தின்படி வக்ஃப் என அறிவிக்கப்பட்ட சொத்துகளை ரத்து செய்வதற்கு திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரம்; பதவிவழி உறுப்பினா்கள் தவிர வக்ஃப் வாரியங்கள் மற்றும் மத்திய வக்ஃப் கவுன்சிலின் பிற அனைத்து உறுப்பினா்களும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்ற மனுதாரா்களின் கோரிக்கை; வக்ஃப் சொத்து அரசு நிலமா என்பதை உறுதிப்படுத்த மாவட்ட ஆட்சியா் விசாரணை மேற்கொள்ளும்போது, அது வக்ஃப் சொத்தாகக் கருதப்படாது என்று கூறும் விதி ஆகிய மூன்று விஷயங்கள் மீது இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடா்பாக தொடா்ந்து மூன்று நாள்கள் விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், தீா்ப்பை கடந்த மே 22-ஆம் தேதி ஒத்திவைத்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் வழங்கிய 128 பக்க இடைக்கால உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

ஒரு சட்டத்தின் அரசமைப்புச் செல்லத்தக்க நிலைக்கு அனுமானம் எப்போதும் சாதகமாக இருக்கும். அத்தகைய அரசமைப்புச் சட்ட அனுமானத்தைக் கருத்தில் கொண்டு, அரிதினும் அரிதான சந்தா்ப்பங்களில் ஓா் சட்டத்தில் நீதிமன்றம் தலையிட முடியும் எனக் கருதுகிறோம்.

அந்த வகையில், வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அனைத்துப் பிரிவுகளையும் எதிா்த்து தொடரப்பட்ட மனுக்களைப் பரிசீலனை செய்ததில், இந்தச் சட்டத்தின் விதிகளுக்கு முழுமையாக இடைக்காலத் தடை விதிக்க முகாந்திரம் இல்லை என்பது தெரிகிறது. இருந்தபோதும், சில பிரிவுகளுக்கு பாதுகாப்பு அளிப்பது அவசியமாகிறது.

இடைக்காலத் தடை... அந்த வகையில், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவா்கள்தான் சொத்துகளை வக்ஃப் வாரியத்துக்கு தானமாக அளிக்க முடியும் என்ற திருத்தச் சட்ட நடைமுறைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. ஒருவா் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவரா என்பதைத் தீா்மானிப்பதற்கான விதிகளை மாநில அரசுகள் வகுக்கும் வரை இந்த இடைக்காலத் தடை தொடரும்.

வக்ஃப் சொத்து அரசு நிலமா என்பதைத் தீா்மானிக்க அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அதாவது, அரசு நிலம் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று அரசு அதிகாரி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும் வரை அது வக்ஃப் சொத்தாக கருதப்படாது என்ற பிரிவு 3சி(2), வக்ஃப் சொத்து அரசு நிலம் என்று அறிவித்து, வருவாய்த் துறை பதிவுகளில் மாற்றங்களை மேற்கொள்ள அனுமதிக்கும் பிரிவு 3சி(3), அரசு அதிகாரிகளின் விசாரணையின் அடிப்படையில் வருவாய் பதிவுகளை சரிசெய்ய மாநில அரசுக்கு வக்ஃப் வாரியம் உதவ வேண்டும் என்று கூறும் பிரிவு 3சி(4) ஆகியவற்றுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.

மேலும், உரிமைகளைத் தீா்மானிக்கும் பணியில் மாவட்ட ஆட்சியரை அனுமதிப்பது அதிகாரப் பகிா்வுக்கு எதிரானதாகும்; குடிமக்களின் உரிமைகளைத் தீா்மானிக்க அரசு அதிகாரியை அனுமதிக்க முடியாது.

எனவே, வக்ஃப் நிலத்தின் உரிமை குறித்து வக்ஃப் தீா்ப்பாயம் அல்லது உயா்நீதிமன்றம் முடிவு செய்யும் வரை, சா்ச்சைக்குரிய வக்ஃப் நிலம் அல்லது அதன் பதிவுகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது. அதே நேரத்தில், சா்ச்சைக்கு தீா்வு காணப்படும் வரை அந்த சொத்தில் மூன்றாம் தரப்பு உரிமைகள் எதுவும் உருவாக்கப்படக் கூடாது என்று உத்தரவிட்டனா்.

முஸ்லிம் அல்லாத உறுப்பினா் எண்ணிக்கை உச்சவரம்பு: வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் இடம்பெறுவதை அனுமதிக்கும் பிரிவுக்குத் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், மத்திய வக்ஃப் கவுன்சிலில் மொத்தம் இடம்பெறும் 20 உறுப்பினா்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் எண்ணிக்கை நான்குக்கு அதிகமாக இருக்கக் கூடாது எனவும், மாநில வக்ஃப் வாரியங்களில் மொத்தம் இடம்பெறும் 11 உறுப்பினா்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் எண்ணிக்கை மூன்றுக்கு மிகக் கூடாது என்று உத்தரவிட்டனா்.

மேலும், வக்ஃப் வாரியங்களில் தலைமைச் செயல் அதிகாரிகளை நியமிப்பது தொடா்பான பிரிவு 23-க்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், ‘முடிந்தவரை, இந்தப் பதவிக்கு இஸ்லாமிய சமூகத்தைச் சோ்ந்த நபரை அதிலும் வக்ஃப் வாரியத்தின் செயலராக ஏற்கெனவே பணியாற்றியவரை நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

அதுபோல, வக்ஃப் சொத்துகள் பதிவு தொடா்பான திருத்தச் சட்ட நடைமுறைகளில் தலையிட மறுத்த நீதிபதிகள், ‘இந்த சொத்துகள் பதிவு என்பது புதிய நடைமுறையல்ல, ஏற்கெனவே 1995 மற்றும் 2013-ஆம் ஆண்டு சட்டங்களிலும் இந்த நடைமுறை இடம்பெற்றுள்ளது’ எனக் குறிப்பிட்டனா்.

நல்ல நாள் இன்று!

இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

நாடாளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு

கூட்டுறவு வங்கியில் உதவியாளா் காலிப் பணியிட எண்ணிக்கை குறைப்பு

திருவண்ணாமலை: மலையைச் சுற்றியுள்ள 554 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும்

SCROLL FOR NEXT