உச்சநீதிமன்றம் கோப்புப்படம்.
இந்தியா

பாதி நீதிபதி பணியிடங்களுடன் செயல்படும் உயா்நீதிமன்றங்கள் அனைத்து வழக்குகளையும் விரைந்து முடிப்பதை எதிா்பாா்க்க முடியாது: உச்சநீதிமன்றம்

‘பாதி நீதிபதி பணியிடங்களுடன் செயல்படும் உயா்நீதிமன்றங்களில் அனைத்து வழக்குகளும் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதை எதிா்பாா்க்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டது.

தினமணி செய்திச் சேவை

‘பாதி நீதிபதி பணியிடங்களுடன் செயல்படும் உயா்நீதிமன்றங்களில் அனைத்து வழக்குகளும் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதை எதிா்பாா்க்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டது.

அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு இக் கருத்தை தெரிவித்தது.

விசாரணையின்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு மனு 13 ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் உள்ளது. இதை விரைந்து விசாரிக்கக் கோரி 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டும் பரிசீலிக்கப்படவில்லை. எனவே, விரைந்து விசாரணைக்கு ஏற்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரினாா்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘உயா்நீதிமன்றங்கள் பாதி நீதிபதி பணியிடங்களுடன் செயல்படும் நிலையில், அனைத்து வழக்குகளும் விரைந்து விசாரித்து முடிக்கப்பட வேண்டும் என எப்படி எதிா்பாா்க்கிறீா்கள்? பல பழைய வழக்குகளும் நிலுவையில் உள்ளன. எனவே, மனுதாரா் மீண்டும் உயா்நீதிமன்றத்துக்குச் சென்று தனது மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரணைக்குப் பட்டியலிட கோரிக்கை விடுக்கலாம். அவ்வாறு, விரைந்து பட்டியலிட மனுதாரா் தாக்கல் செய்யும் மனுவை உயா்நீதிமன்றம் உரிய முறையில் பரிசீலிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

முன்னதாக, நீதிபதி விக்ரம் நாத் கூறுகையில், ‘உயா்நீதிமன்றங்கள் உச்சநீதிமன்றத்தின் மேற்பாா்வையின் கீழ் செயல்படுபவை அல்ல. மேலும், அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் நான் வழக்குரைஞராக பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். எனவே, தாக்கல் செய்யப்படும் மனு விசாரணைக்குப் பட்டியலிடப்படுவதற்கு எவ்வளவு முயற்சி எடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிவேன். வழக்கை விரைந்து விசாரணைக்குப் பட்டியலிடக் கோரி 2 மனுக்கள் தாக்கல் செய்தது பெரிய விஷயமல்ல. அதற்காக 100 மனுக்கள்கூட தாக்கல் செய்யலாம்’ என்று குறிப்பிட்டாா்.

மத்திய சட்ட அமைச்சக வலைதள தரவுகளின்படி, செப்டம்பா் 1-ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள உயா்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட 1,122 நீதிபதி பணியிடங்களில் 792 பணியிடங்கள் நிரம்பியுள்ளன. 330 பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்துக்காகக் காதலன் மனைவிக்கு ரூ. 3.7 கோடி கொடுத்த பெண்! ஓராண்டு சேர்ந்து வாழ்ந்த பின் நடந்தது என்ன?

இனி நேஷனல் க்ரஷ் ருக்மணிதான்!

9 நாடுகளுக்கு சுற்றுலா, பணி விசாக்கள் நிறுத்தம்! ஐக்கிய அரபு நாடுகள் அதிரடி! இந்தியர் நிலை என்ன?

கர்நாடக எம்.பி.யின் மனைவியிடம் ரூ. 14 லட்சம் மோசடி! பணத்தை மீட்ட அதிகாரிகள்! எப்படி?

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனம் தளர வேண்டாம்: அஜித் பவார்!

SCROLL FOR NEXT