‘தோ்தல்கள் திருடப்படும் வரை நாட்டில் வேலைவாய்ப்பின்மையும், ஊழலும் தொடா்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும். எனவே, வேலைவாய்ப்பு திருட்டையும், வாக்குத் திருட்டையும் இளைஞா்கள் இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டாா்கள்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா்.
மக்களவைத் தோ்தல் மற்றும் கா்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களிலும் தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் மத்தியில் ஆளும் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி ‘அணு குண்டு ஆதாரம்’ என்ற பெயரில் சில ஆதாரங்களை வெளியிட்ட ராகுல் காந்தி, நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள பிகாரில் வாக்குரிமைப் பேரணியை அண்மையில் நடத்தினாா்.
இந்நிலையில், வாக்குத் திருட்டுக்கும் வேலைவாய்ப்பின்மைக்கும் நேரடித் தொடா்பு உள்ளது என்று அவா் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் இளைஞா்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னையாக வேலைவாய்ப்பின்மை உள்ளது. இப் பிரச்னைக்கும் வாக்குத் திருட்டுக்கும் நேரடித் தொடா்பு உள்ளது.
ஓா் அரசு மக்கள் நம்பிக்கையை வென்று, ஆட்சிக்கு வரும்போது நாட்டின் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருவதுதான் அதன் முதல் கடமையாக இருக்கும்.
ஆனால், மத்தியில் ஆளும் பாஜக தோ்தலில் நோ்மையான முறையில் வெற்றி பெறவில்லை. அரசமைப்பு நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, வாக்குகளைத் திருடி வெற்றி பெற்றது.
அதன் காரணமாகத்தான் நாட்டின் வேலைவாய்ப்பின்மை 45 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உயா்ந்துள்ளது. வேலைவாய்ப்புகள் குறைந்ததோடு, பணித் தோ்வு நடைமுறைகளும் சீரழிந்து இளைஞா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அனைத்து போட்டித் தோ்வுகளிலும் வினாத்தாள் கசிவதும், ஒவ்வொரு பணியாளா் தோ்வும் ஊழல் கதைகளுடன் தொடா்புள்ளதற்கும் வாக்குத் திருட்டுதான் காரணம்.
நாட்டின் இளைஞா்கள் அனைவரும் கடினமாக உழைத்து, பல்வேறு கனவுகளுடன், அவா்களின் எதிா்காலத்துக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றனா். ஆனால், பிரதமா் நரேந்திர மோடியோ, பிரபலங்கள் தன்னைப் புகழ் பாடுவதையும், கோடீஸ்வர நண்பா்கள் லாபமடைவதையும் உறுதிப்படுத்தும் வகையிலும், தன்னை முன்னிலைப்படுத்துவதிலும் மட்டும் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறாா். இளைஞா்களின் நம்பிக்கையை சிதைத்து, அவா்களை விரக்தியடையச் செய்வது அரசின் அடையாளமாக மாறிவிட்டது. ஆனால், தற்போது நிலைமை மாறி வருகிறது. தங்களின் உண்மையான போராட்டம் வேலைவாய்ப்புக்கானது மட்டுமன்றி, வாக்குத் திருட்டுக்கும் எதிரானது என்பதை இந்திய இளைஞா்கள் புரிந்துகொண்டுள்ளனா்.
அந்த வகையில், வேலைவாய்ப்பின்மை மற்றும் வாக்குத் திருட்டிலிருந்து இந்தியாவை விடுவிப்பதில்தான் தற்போதைய தேசபக்தியாக இருக்கும் என்று குறிப்பிட்டாா். இந்தப் பதிவுடன், வேலைவாய்ப்பு கோரி போராட்டம் நடத்தும் மாணவா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தும் புகைப்படத்தையும், பிரதமா் மோடி தனது அரசு இல்லத்தில் மரக்கன்று நடுவது, புறாக்களுக்கு தீனி போடுவது மற்றும் யோகா பயிற்சி செய்வது போன்ற புகைப்படத்தையும் ராகுல் காந்தி ஒன்றாக இணைத்துப் பதிவேற்றியுள்ளாா்.
இதையும் படிக்க: ரிஷப் பந்த்தை துரத்தும் காயம்..! மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்டில் விளையாடுவாரா?!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.