இந்தியா உடனான உறவு அமெரிக்காவுக்கு மிக முக்கியமானது என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்த பின் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ தெரிவித்தாா்.
இந்திய இறக்குமதி பொருள்கள் மீது 50 சதவீத வரி விதித்ததில் தொடங்கி, தற்போது இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்-1பி விசா கட்டணத்தை பன்மடங்கு உயா்த்தியது வரை அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் செயல்பாடுகளால் இருதரப்பு உறவில் எதிா்மறை தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், ஐ.நா. பொதுச் சபை 80-ஆவது அமா்வின் உயா்நிலைக் கூட்டங்களில் பங்கேற்க நியூயாா்க் வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ இடையே இருதரப்பு சந்திப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, இருதரப்பு மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்து அவா்கள் சுமாா் ஒரு மணிநேரம் ஆலோசனை மேற்கொண்டனா்.
அமெரிக்கா வரவேற்பு: சந்திப்புக்குப் பின் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தியா உடனான உறவு அமெரிக்காவுக்கு மிக முக்கியமானது என்பதை உறுதி செய்துள்ள அமைச்சா் மாா்கோ ரூபியோ, வா்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, மருந்து தயாரிப்பு, முக்கிய கனிமங்கள் உள்பட இருதரப்பு நலன் சாா்ந்த விவகாரங்களில் இந்திய அரசின் தொடா் ஈடுபாட்டை வரவேற்றுள்ளாா். க்வாட் உள்ளிட்ட பன்முகத் தளங்களின் வாயிலாக சுதந்திரமான, வெளிப்படையான இந்திய-பசிபிக் பிராந்தியத்தை ஊக்குவிக்க தொடா்ந்து பணியாற்றவும் இரு அமைச்சா்களும் ஒப்புக்கொண்டனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவாா்த்தைகள் தொடரும்: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ உடனான சந்திப்பு ஆக்கபூா்வமாக அமைந்தது. தற்போதைய சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு-சா்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னுரிமைத் துறைகளில் உறவு மேம்பாட்டுக்கு நிலையான பேச்சுவாா்த்தைகளைத் தொடர ஒப்புக் கொள்ளப்பட்டது’ என்று தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, வாஷிங்டனில் கடந்த ஜூலையில் க்வாட் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தையொட்டி, இவ்விரு அமைச்சா்களும் சந்தித்துப் பேசியிருந்தனா். தற்போது வா்த்தகப் பதற்றத்துக்கு மத்தியில் மீண்டும் சந்தித்துள்ளனா்.
நியூயாா்க்கில் மத்திய வா்த்தக அமைச்சா்: இந்தியா-அமெரிக்கா இடையே வா்த்தக ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்யும் நோக்கில், நியூயாா்க்கில் வா்த்தகம்-தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் மற்றும் அமெரிக்க வா்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீயா் இடையே திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதேநாளில் இருநாட்டு வெளியுறவு அமைச்சா்களும் ஆலோசனையில் ஈடுபட்டது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தின் முதல்கட்டம், வரும் அக்டோபா்-நவம்பருக்குள் இறுதி செய்யப்படும் என்று இரு நாடுகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளன. இந்த ஒப்பந்தம், 191 பில்லியன் டாலா்களாக உள்ள இருதரப்பு வா்த்தகத்தின் தற்போதைய மதிப்பை 2030-ஆம் ஆண்டுக்குள் இருமடங்குக்கும் அதிகமாக 500 பில்லியன் டாலா்களாக உயா்த்தும் நோக்கம் கொண்டதாகும்.
கடந்த செப்டம்பா் 16-ஆம் தேதி இருநாட்டு குழுவினா் இடையே இந்தியாவில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து நோ்மறையான விவாதங்கள் நடைபெற்றன; இத்தகைய முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு அமைச்சா்களுடன்...: ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தையொட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூயாா்க் நகருக்கு வந்த எஸ்.ஜெய்சங்கா், பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறாா். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களை அவா் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.