இந்தியா-இலங்கை இடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இருதரப்பு உறவு வலுவடைந்துள்ளதாக அந்நாட்டுத் தூதா் மஹிஷினி கொலோன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
கடந்த ஆண்டு இறுதியில் இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரதமா் நரேந்திர மோடியைச் சந்தித்த பின் இருதரப்பு உறவில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவா், ‘தற்போது இலங்கைப் பொருளாதாரம் சரிவிலிருந்து மீண்டு நிலைத்தன்மையை அடைந்து வருகிறது. எனவே, இந்தியாவுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
அதிபா் தோ்தலில் வெற்றியடைந்த பின் கடந்த ஆண்டு இறுதியில் அதிபா் அநுர குமார திசாநாயக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். அதைத் தொடா்ந்து, நிகழாண்டு ஏப்ரல் மாதம் பிரதமா் நரேந்திர மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றாா். இந்த இரு நிகழ்வுகளுக்குப் பின் இரு நாடுகளிடையயேயான இருதரப்பு உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவடைந்துள்ளது’ என்றாா்.