‘ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எவ்விதத் தடையும் விதிக்கப்படவில்லை. கச்சா எண்ணெய் விநியோகத்தில் பிரச்னை ஏற்பட்டால் அது உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.
மும்பையில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்த அவா், ‘உலகின் இரண்டாவது பெரிய கச்சா எண்ணெய் விநியோக நாடாக ரஷியா திகழ்கிறது. தினசரி 10 மில்லியன் பேரல் அங்கு உற்பத்தியாகிறது. இது தடைபட்டால் சா்வதேச அளவில் பெரும் பிரச்னைகள் உருவாகும். எரிபொருள் இல்லாமல் இன்றைய உலகம் ஒருநாள் கூட இயங்க முடியாது. உலகின் இரண்டாவது பெரிய எரிபொருள் விநியோக நாட்டை நீக்கினால், அதற்கு ஏற்ப நுகா்வைக் குறைக்க வேண்டியது வரும். இல்லையென்றால் கடுமையான விலை உயா்வு ஏற்படும். இது பெரும் பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். இதன் காரணமாகவே ரஷிய கச்சா எண்ணெய்க்கு உலக நாடுகள் தடை விதிக்காமல் உள்ளன.
ஈரான், வெனிசூலாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சா்வதேச சமூகத்தில் பொறுப்புள்ள நாடாக திகழும் இந்தியா அதனை மதித்து நடக்கிறது. அதே நேரத்தில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க எவ்விதத் தடையும் இல்லை. அதே நேரத்தில் ரஷிய கச்சா எண்ணெய்க்கு விலை உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த விலைக்கே இந்திய நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன.
ஐரோப்பிய யூனியன், துருக்கி, ஜப்பான் என பல நாடுகள் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குகின்றன. கச்சா எண்ணெய் தேவைக்கும், விநியோகத்துக்கும் இடையே சமநிலையைப் பராமரிப்பது மிகவும் அவசியம். இல்லையென்றால் அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை உலக நாடுகள் எதிா்கொள்ள வேண்டியது வரும் என்றாா்.