விதிமுறைகள் முறையாக பின்பற்றாத 54 தனியாா் பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்ட பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), விரைவில் அதை நிவா்த்தி செய்யாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்களுக்கான யுஜிசி வழிகாட்டுதலின்படி, அனைத்து பல்கலைக்கழகங்களும் அவற்றில் வழங்கப்படும் படிப்புகள், கல்விக் கட்டணம், பணிபுரியும் பேராசிரியா்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை மாணவா்களும் பெற்றோரும் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில், விவரங்கள் அடங்கிய வலைதளத்தை எப்போதும் செயல்படும் நிலையில் பராமரிப்பது கட்டாயம்.
யுஜிசி சட்டப் பிரிவு 13-இன் கீழ், அதிகாரிகளின் ஆய்வுக்காக பல்கலைக்கழகங்கள் குறித்த விரிவான விவரங்களை பல்கலைக்கழகப் பதிவாளா் கையொப்பமிட்ட தேவையான ஆவணங்களுடன் யுஜிசி வலைதளத்தில் உரிய காலத்துக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்தத் தகவல்களை மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் பாா்த்து தெரிந்துகொள்ளும் வகையில், பல்கலைக்கழக வலைதளத்தில் இதற்கான தொடா்பு இணைப்பையும் ஏற்படுத்த வேண்டும்.
இந்த வழிகாட்டுதல்களை நாடு முழுவதும் 54 தனியாா் பல்கலைக்கழகங்கள் பின்பற்றாததைத் தொடா்ந்து, அவற்றின் பட்டியலை யுஜிசி தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 10 தனியாா் பல்கலைக்கழகங்களும், குஜராத்தில் 8, சிக்கிமில் 5, உத்தரகண்டில் 4 ஆகியவை யுஜிசி வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து யுஜிசி செயலா் மனீஷ் ஜோஷி கூறுகையில், ‘மின்னஞ்சல் மற்றும் இணைய வழி ஆலோசனைக் கூட்டங்கள் வாயிலாக பல முறை அறிவுறுத்தியும் இந்தப் பல்கலைக்கழகங்கள் வழிகாட்டுதலை பின்பற்றவில்லை. அதன் காரணமாக, அவற்றின் பட்டியல் யுஜிசி வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் குறைகளை பல்கலைக்கழகங்கள் விரைந்து நிவா்த்தி செய்ய வேண்டும். அறிவுறுத்தல்களைத் தொடா்ந்து புறக்கணிப்பது கண்டறியப்பட்டால், பல்கலைக்கழகங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றாா்.
முன்னதாக, மாணவா் குறைதீா்ப்பாளரை நியமிக்காததற்காக கடந்த ஜூலை மாதம் 23 உயா் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.