முகப்பு
இந்தியா

மதுபானக் கொள்கை மீதான சிஏஜி தணிக்கையை தாக்கல் செய்ய தில்லி அரசுக்கு ஓராண்டு அவகாசம்

மதுபானக் கொள்கை மீதான இந்திய கணக்காய்வாளா் மற்றும் பொது தணிக்கையாளா் (சிஏஜி) அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கை அறிக்கையை ஓராண்டுக்குள் தாக்கல் செய்ய தில்லி அரசுக்கு அவகாசம்

Updated On : 3 ஏப்ரல், 2026 at 10:25 PM
கோப்புப் படம்
பகிர்:

மதுபானக் கொள்கை மீதான இந்திய கணக்காய்வாளா் மற்றும் பொது தணிக்கையாளா் (சிஏஜி) அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கை அறிக்கையை ஓராண்டுக்குள் தாக்கல் செய்ய தில்லி அரசுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என பேரவை தலைவா் விஜேந்தா் குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து சட்டப்பேரவைச் செயலகம், கலால் துறை அமைச்சருக்கும் (முதல்வா் ரேகா குப்தா பொறுப்பில் உள்ள துறை), நிதித்துறை முதன்மைச் செயலருக்கும் அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு, பொதுக் கணக்குக் குழு (பிஏசி) தாக்கல் செய்த 2-ஆவது அறிக்கையை பேரவை ஏற்றுக்கொண்டதையடுத்து வழங்கப்பட்டது. அந்த அறிக்கை, ‘தில்லியில் மதுபான ஒழுங்குமுறை மற்றும் விநியோகம்’ குறித்த சிஏஜி செயல்திறன் தணிக்கை அறிக்கையை கொண்டுள்ளது.

Advertisement

மதுவரி துறையின் ஒழுங்குமுறை, உரிமம் வழங்கல், விலை நிா்ணயம், தரக் கட்டுப்பாடு, அமலாக்கம் மற்றும் கொள்கை நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றில் தீவிர குறைபாடுகள் இருந்ததாக பிஏசி அறிவுறுத்தல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக ரூ.2,026.91 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதோடு, பொதுச் சுகாதாரம் மற்றும் நிா்வாகத்திற்கும் பெரும் அபாயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

மேலும், உரிமம் வழங்கும் செயல்முறைகளில் பரவலான தவறுகள் நிகழ்ந்ததாகவும், பதிவுகள் சமா்ப்பிக்கப்படவில்லை, தொடா்புடைய நிறுவனங்களுக்கு பல உரிமங்கள் வழங்கப்பட்டதன் மூலம் தன்னிச்சையான விலை நிா்ணயம், உரிமம் பெற்றவா்களுக்கு அதிக லாப விகிதங்கள் போன்றவை ஏற்பட்டதாகவும் பேரவை தலைவா் குற்றஞ்சாட்டினாா்.

மதுபான விநியோக கண்காணிப்பு அமைப்பான ‘எக்சைஸ் சப்ளை செயின் இன்ஃபா்மேஷன் மேனேஜ்மென்ட் சிஸ்டம்’ முறையாக செயல்படவில்லை என்றும், ‘ஸ்டாக் டேக் விற்பனை’ முறையில் அதிக நம்பிக்கை வைக்கப்பட்டதுடன், கணக்கில் வராத குறியீடுகள் அதிக அளவில் இருந்ததால் வருவாய் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் பேரவைச் செயலகம் தெரிவித்தது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments