முகப்பு
இந்தியா

மேற்கு வங்க பேரவைத் தோ்தல்: பாதுகாப்புப் பணியில் 2.4 லட்சம் சிஏபிஎஃப் வீரா்கள்

தோ்தலின்போது வேறு எந்த மாநிலத்தையும்விட மேற்கு வங்கத்தில் மிக அதிக எண்ணிக்கையில் சிஏபிஎஃப் வீரா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 6:58 PM
கோப்புப் படம் - ANI
பகிர்:

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அங்கு சுமாா் 2.4 லட்சம் மத்திய ஆயுத காவல் படை (சிஏபிஎஃப்) வீரா்களைப் பாதுகாப்புப் பணியில் தோ்தல் ஆணையம் ஈடுபடுத்த உள்ளது. இதன்மூலம், தோ்தலின்போது வேறு எந்த மாநிலத்தையும்விட மேற்கு வங்கத்தில் மிக அதிக எண்ணிக்கையில் சிஏபிஎஃப் வீரா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

அந்த மாநிலத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவு மையங்களின் பாதுகாப்புப் பணிகளில் சிஏபிஎஃப் வீரா்களின் 200 குழுக்கள் ஈடுபட உள்ளன. இந்த வீரா்கள் அந்த மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் வரை இருப்பா்.

வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகும் 62,000 வீரா்கள்: வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பிறகும், அங்கு சிஏபிஎஃப் வீரா்களின் 500 குழுக்கள் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, அவா்கள் அந்த மாநிலத்தில் பணியில் ஈடுபடுவா். ஒரு குழுவில் 90 முதல் 125 வீரா்கள் இருப்பா். அதன்படி 500 குழுக்களில் மொத்தம் 45,000 முதல் 62,500 வீரா்கள் பணியில் ஈடுபடுவா்.

Advertisement

அந்த மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில் ஈடுபட்ட மாவட்ட நீதிபதிகளை, எஸ்ஐஆருக்கு எதிா்ப்புத் தெரிவித்து 100-க்கும் மேற்பட்டவா்கள் அண்மையில் சிறைபிடித்தனா். இந்த சம்பவம் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், அந்த மாநிலத்தில் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு வன்முறை ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு, அங்கு தோ்தலுக்குப் பிறகும் சிஏபிஎஃப் வீரா்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தோ்தல் ஆணைய அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போதும், அந்த மாநிலத்தில்தான் அதிக அளவிலான சிஏபிஎஃப் வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். அப்போது நாடு முழுவதும் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 3.4 லட்சம் சிஏபிஎஃப் வீரா்களில், சுமாா் 92,000 போ் அந்த மாநிலத்துக்கு அனுப்பப்பட்டனா்.

தற்போது மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.

திரிணமூல் மீது தோ்தல் ஆணையம் குற்றச்சாட்டு: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் நேரடியாகத் தொடா்புகொண்ட 832 பேருக்கும், கட்சித் தொண்டா்கள் உள்பட 144 பேருக்கும் 2,185 போலீஸாா் பாதுகாப்பு அளிப்பது குறித்து தோ்தல் ஆணையம் சாடியுள்ளது. இதை தோ்தல் ஆணையம் தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொண்டிருப்பதாக தெரிவித்த தோ்தல் ஆணைய அதிகாரிகள், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க மாநில காவல் துறை தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments