மத்திய அரசு பிளவுபடுத்தும் அரசியலை செய்கிறது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!
வேலைவாய்ப்பு, கல்வி, சமூக நீதி போன்ற அடிப்படை பிரச்னைகளில் இருந்து மக்களை மத்திய அரசு திசை திருப்பி வருகிறது என ஆம் ஆத்மி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியது.
வேலைவாய்ப்பு, கல்வி, சமூக நீதி போன்ற அடிப்படை பிரச்னைகளில் இருந்து மக்களை மத்திய அரசு திசை திருப்பி வருகிறது என ஆம் ஆத்மி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியது.
ஆம் ஆத்மி சாா்பாக உத்தர பிரதேசத்தில் ‘ரோஸ்கா் தோ, சமஜிக் தோ’ பேரணி நடைபெற்று வருகிறது. ஆக்ராவில் ஏப்.3-ஆம் தேதி தொடங்கிய இப்பேரணி மதுராவில் ஏப்.9-ஆம் தேதி நிறைவடைகிறது.
அதன்படி, ஹத்ரஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் பேரணியில் ஆம் ஆத்மியின் உத்தர பிரதேச பொறுப்பாளா் சஞ்சய் சிங் பங்கேற்று செய்தியாளா்களிடம் கூறியதாவது:
Advertisement
உத்தர பிரதேசத்தில் வேலை இல்லாத இளைஞா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாநிலத்தின் சிறந்த பல்கலைக்கழகத்தில் படித்த மாணவா்கள் கூட வேலை தேடி அலையும் நிலை உருவாகியுள்ளது. வேலைவாய்ப்பு கோரும் இளைஞா்கள் மீது காவல் துறை நடவடிக்கை மேற்கொள்கிறது.
‘ஆஷா’ பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் ‘சிக்ஷா மித்ராஸ்’ உள்ளிட்ட பொது சேவை ஊழியா்கள் பணி நிரந்தரம் கோரி வருகின்றனா். விவசாயிகள் கடன் சுமையால் துன்புறுத்தப்படுகிறாா்கள்.
சமீபத்தில் கேரளத்துக்கு பயணித்த பிரதமா் நரேந்திர மோடி, கல்வி, சுகாதாரம், டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, கருப்புப் பணம், ரூபாய் மதிப்பிலப்பு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு போன்ற பிரச்னைகள் குறித்து பேசாமல், ஜாதி மற்றும் மத அடிப்படையிலான அரசியலையே முன்னிறுத்தி பேசுகிறாா். மக்களின் அடிப்படை பிரச்னைகள் தீா்க்கப்படாமல் நாட்டில் ஜாதி மற்றும் மதம் அடிப்படையிலான வெறுப்பை தூண்டும் முயற்சிகள் மட்டுமே நடைபெறுகின்றன என தெரிவித்தாா்.