முதல்வர் மட்டுமே ஆட்சி செய்ய அவர் என்ன கடவுளா? - கேரளத்தில் ராகுல் இறுதிகட்ட பிரசாரம்
”திறமையானவர்களுக்கு வழிவிட வேண்டும்” கேரளத்தில் அனல் பறந்த ராகுலின் இறுதிகட்ட பிரசாரம்
திருச்சூர் : கேரளத்தில் வரும் 9-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தங்கள் ஜனநாயகக் கடமையாற்ற வாக்காளர்கள் ஆவலுடன் உள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சித் தலைவர்களின் இறுதிகட்ட பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
இங்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி(எல்டிஎஃப்) தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. அதேநேரம், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி(யூடிஎஃப்) களம் காண்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மோதுவதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(ஏப். 6) கொடுங்கல்லூர் பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(சிபிஐ எம்) கட்சியை மத்தியில் ஆளும் பாஜகவுடன் ஒப்பிட்டு கடுமையான விமர்சனங்களைச் சுமத்தினார்.
Advertisement
அவர் பேசியதாவது : “யூடிஎஃப்-க்கு அஎதிராக எல்டிஎஃப்-க்கு மறைமுகமாக ஒரு உதவிக்கரம் நீட்டப்படுகிறது. இங்குள்ள அரசு ஒரு உண்மையான இடதுசாரி அரசு நிர்வாகத்தைப்போலச் செயல்படவில்லை என்பதை இங்குள்ள சிபிஐ(எம்) தொண்டர்கள்கூட ஆமோதிக்கின்றனர்.
பிரதமர் மோடி தமது பிரசாரங்களில், பொதுக்கூட்டங்களிலெல்லாம் கடவுளையும் கோவில்களையும் மதம் சார்புக் கருத்துகளையும் வெளிப்படுத்த தவறுவதேயில்லை. ஆனால், கேரளத்தில் மட்டும் அவர் சபரிமலையில் தங்கம் முறைகேடு விவகாரம் பற்றி வாய் திறப்பதில்லை. ஏனெனில், அவ்விவகாரத்தில் சிபிஐ(எம்) தலைவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். அதனால் அவர் அதைப் பற்றி பேசுவதில்லை. அவர் முதல்வரையும் சிபிஐ (எம்) கட்சியையும் பாதுகாக்க விரும்புகிறார்.
கேரள முதல்வருக்கு எதிராக அமலாக்கத்துறை அல்லது சிபிஐ நடவடிக்கைகள் எதுவும் இல்லை. ஏனெனில், பாஜகவுடன் ஒரு ஒப்பந்தம் அவர்களுக்கு இருக்கிறது.
இதன்மூலம், ஒரு கூட்டுப்பங்காளிகளை எதிர்த்து நாம் போராடுகிறோம் என்பது தெளிவாகிவிட்டது. அவர்களுடைய கூட்டாளி யார் என்பதை நினைவில்கொள்ளவும்.
யார், சத்தீஸ்கரில் கேரள செவிலியர்களைத் தாக்கினார்களோ, மணிப்பூரைத் தீக்கிரையாக்கினார்களோ, இந்தியாவை மத ரீதியாக பிரிக்கிறார்களோ, வெறுப்புணர்வையும் வன்முறையையும் பரப்புகிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளனர்.”
கேரள தேர்தல் பிரசாரத்தின் ஒருபகுதியாக ஆளுங்கட்சி தரப்பில் முதல்வர் பினராயி விஜயன் படத்துடன் கூடிய ‘வேறு யார்?’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகள் பிரசார களத்தில் பயன்படுத்தப்படுவதற்கு ராகுல் காந்தி கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், “முதல்வர் ஒன்றும் ஒரு கடவுள் அல்ல; கேரளத்தை அவர் மட்டுமே ஆட்சி செய்வதற்கு. ஆயிரக்கணக்கிலான திறமைமிக்க மக்கள் இம்மாநிலத்தில் உள்ளனர். அவர்களுள் ஒப்பற்ற திறனுடன் திகழும் பெண்களும் அடங்குவர்.
அப்படியிருக்கும்போது, மேற்குறிப்பிட்ட பிரசார யுக்தியானது இம்மாநில மக்களை அவமதிக்கும் நடத்தையாகும். மேலும், இது ஆணவத்தின் உச்சம்.
இந்தப் பிரசார யுக்தியால் அவர்கள் கூட்டணியில்குட திறன்மிகு தலைவர்கள் இல்லை என்பதை குறியிடுவதாக அமைந்துள்ளது. இடதுசாரியைச் சார்ந்த தலைவர்களுக்கும் இதுவொரு அவமரியாதை.
ஆகவே, முதல்வர் மேற்குறிப்பிட பிரசார பதாகைகளை கேரளத்தின் வீதிகளிலிருந்து நீக்கும்படி அவரிடம் அறிவுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். அந்தப் பதாகைகளை ஒரு கேரளவாசி ஒவ்வொரு முறையும் பார்க்கும்போதும் அவர் தம்மைத்தாமே தரக்குறைவாக நடத்தப்படுவதாக உணருகிறார்.
இத்தகைய ஆணவ மனநிலையை எதிர்த்தே நாங்கள் போராடுகிறோம். இதே மனநிலைதான் நரேந்திர மோடி, அமித் ஷா, ஹிமந்த பிஸ்வ சர்மா ஆகியோரும் கொண்டுள்ளதுடன் அவர்கள் இங்கு மக்களை ஆட்சி செய்கின்றனர்.
அரசியல் தலைவர்கள் எளிமையுடனும் மக்களுடன் கூட்டணியாக பங்களிப்பு அளிக்க வேண்டும். இதுவொன்றும் மகாராஜாக்கள் தாங்கள் மட்டுமே ஆட்சி செய்வோம் என்று சூளுரைக்கும் காலமல்ல.
இதுவொரு நோய். அந்த நோய் பாஜக, ஆர்எஸ்எஸ் கடந்து இடதுசாரியிலும் நீடிக்கிறது.
தாங்கள் ஆளப் பிறந்தவர்கள் என்ற இறுமாப்புடனான மனப்பாங்கை நரேந்திர மோடியும் அமித் ஷாவும் கொண்டுள்ளனரோ அதே மனப்பாங்கு கேரள முதல்வரிடமும் குடிகொண்டிருக்கிறது. இந்த மனநிலை நாட்டைக் கெடுக்கிறது.
ஞானமும் அறிவாற்றலும் விவசாயிகள், வணிகர்கள், உழைப்பாளிகள் என பல தரப்பட்ட மக்களிடம் பரவி கிடக்கிறது. தலைவர்களின் பணி என்னவென்றால், அந்த அறிவாற்றலைப் புரிந்து அந்த மக்களுக்காக பணியாற்றுவதேயாகும்.
உலகளாவிய மற்றும் தேசிய அளவில் ஒரு அதிகாரமிக்க சக்தி ஆட்டிப்படைக்கிறது.
நரேந்திர மோடியை எப்போது தேவைப்பாட்டாலும் தாக்க முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். ஏறத்தாழ அதேபோன்ற உறவில்தான் கேரள முதல்வரும் மோடியுடனும் அமித் ஷாவுடனும் உள்ளார். அதற்கான காரணம், அவரும் அவருடைய குடும்பமும் செய்த ஊழலும் முறைகேடுகளும்.
இன்றைய இந்தியாவில் சிறிய முறைகேடு செய்தால்கூட சம்பந்தப்பட தலைவர்கள் பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்வர். அவ்வளவுதான், அதன்பின் நீங்கள் மோடி மற்றும் ஷாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவீர்கள். இந்த நிலைமை, இப்போது கேரள முதல்வருக்கு ஏற்பட்டுள்ளது.
உக்ரைனில் நீடிக்கும் போரும், மத்திய கிழக்கில் தொடரும் மோதல்களும் எரிபொருள் விலை மற்றும் உரம் கையிருப்பில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. அப்பகுதிகளில் நடைபெறும் அடுத்தடுத்த நகர்வுகளைக் குறைத்து மதிப்பிடக்கூடாது.
மக்களுக்கு இன்னல் காலகட்டங்களில் ஆதரவாக காங்கிரஸ் 5 உத்தரவாதங்களை அளித்துள்ளது. கேரள மாநில சாலைப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம். கல்லூரி செல்லும் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 1,000, சமூக நல ஓய்வூதியமாக ரூ. 3,000 வரை வழங்கப்படும், ரூ. 25 லட்சம் வரை குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு, வட்டியில்லா கடனாக இளம் தொழில்முனைவோருக்கு ரூ. 5 லட்சம் வரை வழங்கப்படும்.” என்றார்.
அத்தொகுதியைக் கவரும் விதத்தில் பேசிய அவர், “புனித தோமையார் இந்தியாவில் முதல்முதலாக காலூன்றிய இடமாக மாலாவும் கொடுங்கல்லூரும் கருதப்படுகின்றன. இப்பகுதிகள் இந்தியாவின் உள்ளடக்கிய கலாசாரத்தை சுட்டிக்காட்டும் பகுதிகள். இந்தியாவின் முதல் மசூதியாக கருதப்படும் சேரமான் ஜும்மா மசூதியின் தாயகம் இப்பூமி. புராதானமிக்க பல கோவில்களுடன் விளங்கும் பகுதியாகவும் விளங்குகிறது.
நீங்கள் இந்தியாவின் பன்முகத்தன்மைக்குச் சிறந்த உதாரணம். வெவ்வேறு மதங்கள், நம்பிக்கைகள் மற்றும் பண்பாட்டு கலாசாரங்களைச் சார்ந்த மக்கள் இங்கு வாழ்த்து வருகின்றனர்” என்றார்.