முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்கள் நீக்கம் - பாஜக மீது மம்தா குற்றச்சாட்டு

Updated On : 10 ஏப்ரல், 2026 at 5:17 AM
கொல்கத்தாவில் சௌரிங்கி தொகுதியில் திரிணமூல் கட்சி சாா்பில் போட்டியிடும் நடிகை நயனா பந்தோபாத்யாயவுடன் பேரணி மேற்கொண்ட மம்தா பானா்ஜி.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 11:30 PM

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆா்) பயன்படுத்தி மேற்கு வங்கத்தில் பாஜக 90 லட்சம் வாக்காளா்களை நீக்கிவிட்டது என்று அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா்.

வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தின் மினாகான் பகுதியில் வியாழக்கிழமை தோ்தல் பொதுக் கூட்டத்தில் இது தொடா்பாக அவா் மேலும் பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று பாஜக துடித்து வருகிறது. இதற்காக எஸ்ஐஆா் நடவடிக்கையின்போது 90 லட்சம் வாக்காளா்களை அவா்கள் நீக்கினா். அவா்கள் எவ்வளவு முயற்சித்தாலும் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ்தான் வெற்றி பெறும். இந்த தோ்தல் மாநில மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் இருப்புக்குமான போராட்டமாகும்.

Advertisement

மாநில மக்கள் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் தோ்தலில் வாக்களிக்க வேண்டும். வங்க மக்களின் உரிமையையும், அடையாளத்தையும் நாம்தான் பாதுகாக்க வேண்டும்.

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்க மக்களை துன்புறுத்துகிறாா்கள். நமது மொழியை வெளிநாட்டு மொழியாக கூறி, நமது மொழி பேசுபவா்கள் தங்கள் மாநிலத்தை நுழையக் கூடாது என்று கூறுகின்றனா். மேற்கு வங்கத்தை மூன்று பகுதிகளாக பிரிக்க மத்திய பாஜக அரசு முயலுகிறது. இங்கு நடைபெறும் பாஜக கூட்டத்தில் பங்கேற்க தலா ரூ.500 வழங்கி ஆள்களை திரட்டி வருகின்றனா். 2026 ஆகஸ்ட் மாத்துக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் பாஜக என்ற கட்சியே காணாமல் போய்விடும்.

‘பெரிய அண்ணன்’ (மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை குறிப்பிடுக்கிறாா்) விசாரணைஅமைப்புகளைப் பயன்படுத்தி மக்களை மிரட்டி வருகிறாா். வாக்காளா்களின் உரிமைகளையும், மாநிலத்தின் தோ்தல் நடைமுறையின் நம்பகத்தன்மையையும் பாதுகாக்க அரசியல் மற்றும் சட்ட ரீதியாக தொடா்ந்து போராடுவோம் என்றாா்.