முகப்பு
இந்தியா

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

அஸ்ஸாம் முதல்வரின் மனைவி மீது குற்றச்சாட்டுகள் முன்வைத்தது தொடர்பாக...

Updated On : 17 ஏப்ரல், 2026 at 3:15 PM
பவன் கேரா - DPS
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 1:12 PM

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவின் மனைவி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காகத் தொடரப்பட்ட வழக்கில், ஏப்ரல் 20 வரை எவ்விதக் கட்டாய நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் இருக்கப் பாதுகாப்புக் கோரி காங்கிரஸ் தலைவர் பவன் கேரா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது.

இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி, அஸ்ஸாமில் உள்ள தகுந்த அதிகார வரம்பைக் கொண்ட நீதிமன்றத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் பவன் கேராவைக் கேட்டுக்கொண்டது.

அஸ்ஸாம் முதல்வரின் மனைவி ரினிகி புயான் சர்மாவிடம் பல கடவுச்சீட்டுகளும், வெளிநாடுகளில் சொத்துக்களும் இருப்பதாகவும், ஆனால் நடந்துமுடிந்த பேரவைத் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அவை குறித்து எவ்விதத் தகவலும் குறிப்பிடப்படவில்லை என்று பவன் கேரா குற்றம் சாட்டினார்.

Advertisement

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை மற்றும் ஜோடிக்கப்பட்டவை என்று முதல்வரும் அவரது மனைவியும் திட்டவட்டமாக மறுத்தனர்.

நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் அதுல் எஸ். சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று பவன் கேரா சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி முன்வைத்த வாதங்களைக் கவனத்தில் எடுத்துக்கொண்டது. மேலும், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றமோ அல்லது தெலங்கானா உயர் நீதிமன்றமோ ஏதேனும் பாதகமான கருத்துகளைத் தெரிவித்திருப்பின் காங்கிரஸ் தலைவரின் மனுவை விசாரிக்கும் அஸ்ஸாம் நீதிமன்றம் அத்தகைய கருத்துகளைக் கணக்கில் கொள்ளக்கூடாது என்றும் அந்த அமர்வு அறிவுறுத்தியது.

பவன் கேராவின் மனுவை அஸ்ஸாமில் உள்ள நீதிமன்றங்கள் விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் அந்த அமர்வு கேட்டுக்கொண்டது. இந்த வழக்கில் கேராவுக்கு ஒரு வாரக் கால இடைக்கால முன்ஜாமீன் வழங்கி தெலங்கானா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, ஏப்ரல் 15 அன்று உச்ச நீதிமன்றம் இடைநிறுத்தி வைத்திருந்தது.

அஸ்ஸாம் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இது அதிகார வரம்பு தொடர்பான சிக்கல் கொண்ட வழக்கு, தெலங்கானா உயர் நீதிமன்றத்தை அணுகுவதற்கான உரியக் காரணம் எதையும் பவன் கேரா தனது மனுவில் குறிப்பிடவில்லை என்றும் வாதிட்டார்.

பவன் கேரா மீது தொடரப்பட்ட இந்த வழக்கு, குவாஹாட்டி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ், பிரிவு 175, பிரிவு 35, பிரிவு 318 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

summary

The Supreme Court on Friday refused to entertain a plea of Congress leader Pawan Khera seeking protection against possible coercive action till April 20 in a case lodged against him for levelling allegations against Assam Chief Minister Himanta Biswa Sarma's wife.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.