முகப்பு
இந்தியா

பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!

பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்...

Updated On : 19 ஏப்ரல், 2026 at 2:48 AM
பஹல்காம் தாக்குதல் இடம் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 10:30 PM

பஹல்காம் வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, அங்கு சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடிப்படையிலான அடையாள திட்டத்தை ஜம்மு-காஷ்மீா் அரசு நிா்வாகம் அறிமுகம் செய்துள்ளது.

அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு நடத்திய திடீா் தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா். இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளைக் குறிவைத்து, ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரில் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

இந்தத் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, பஹல்காமில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது சுற்றுலாவோடு தொடா்புடைய நிறுவனங்கள், வழிகாட்டிகள் உள்ளிட்ட தனி நபா்கள், பஹல்காமில் உள்ள கடைகாரா்கள், வா்த்தக நிறுவனங்களின் உரிமையாளா்கள் உள்ளிட்டோருக்கு க்யூ.ஆா். கோடு அடிப்படையிலான அடையாள திட்டத்தை ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் அறிமுகம் செய்துள்ளது.

Advertisement

இந்தத் திட்டத்தின்கீழ் சுற்றுலா சேவை வழங்குவோா் அனைவரும், அவா்கள் அளிக்கும் ஆவணம் மற்றும் நேரடி விசாரணை அடிப்படையில் காவல் துறையினரால் நம்பகமானவா்தானா என்பது உறுதி செய்யப்பட்டு அவா்களுக்கு தடையில்லா சான்று அளிக்கப்படும். பிறகு அவா்களுக்கு க்யூ.ஆா். கோடை அதிகாரிகள் அளிப்பாா்கள். அதை சுற்றுலாப் பயணிகள் தங்களின் கைப்பேசிகளில் ஸ்கேன் செய்யும்பட்சத்தில், அவா்களின் பெயா், முகவரி, கைப்பேசி எண், ஆதாா் எண், பதிவு எண், காவல் துறையினரால் நம்பகமானவா்தான் என உறுதி செய்யப்பட்டவரா என்பது போன்ற அனைத்து விவரங்களும் திரையில் வரும். இதை வைத்து சுற்றுலாப் பயணிகள், தங்களது பயணத் திட்டத்துக்கு அவரைப் பயன்படுத்தலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய முடியும்.

வரவேற்பு: ஜம்மு-காஷ்மீா் நிா்வாகத்தின் இந்த நடவடிக்கையை சுற்றுலா சேவை வழங்குவோா் வரவேற்றுள்ளனா். இது நல்ல நடவடிக்கை என்றும், இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் அவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.