முகப்பு
இந்தியா

மாநிலங்களவை பெரும்பான்மைக்கு 17 பேர் மட்டும் தேவை: ஆம் ஆத்மி எம்.பி.க்களால் பலம்பெறும் தே.ஜ. கூட்டணி!

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் 7 பேர் பாஜகவில் இணைந்ததால் தே.ஜ.கூட்டணி வலுப்பெற்றுள்ளது.

Updated On : 25 ஏப்ரல், 2026 at 10:31 AM
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்களான ராகவ் சதா, சந்தீப் பதக் மற்றும் அசோக் மிட்டல் ஆகியோர் தில்லியில் உள்ள கட்சித் தலைமையகத்திற்கு சென்றபோது. - ANI
பகிர்:

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் 7 பேர் பாஜகவில் இணைந்த நிலையில், மாநிலங்களவையில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை பெற தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 17 உறுப்பினர்கள் மட்டுமே குறைவாக உள்ளனர்.

இதனால், மசோதா நிறைவேற்றம் தொடர்பான வாக்கெடுப்புகளுக்கு தேவைப்படும் 3-ல் 2 பங்கு பெரும்பான்மையை அடைவதில் பாஜக கூட்டணி வலுப்பெற்று வருகின்றது.

244 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை இப்போது 163 ஆக உள்ளது.

Advertisement

ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்களின் மாற்றத்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாநிலங்களவையில் 145 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது.

கூட்டணிக்குத் தலைமை தாங்கும் பாஜக தனிப்பெரும்பான்மை பெறுவதற்கு இன்னும் 10 சீட்டுகள் குறைவாக உள்ளன. இது அக்கட்சிக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவுக்கு மாநிலங்களவையில் தற்போது 106 எம்.பி.க்கள் உள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்.பி.க்களின் மாற்றத்திற்கு மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்த பின்னர் அந்த எண்ணிக்கை 113 ஆக உயரும்.

மேலும், பாஜகவுக்கு 7 நியமன எம்.பி.க்கள் மற்றும் 2 சுயேட்சை எம்.பி.க்களின் ஆதரவும் கிடைக்க வாய்ப்புள்ளதால் பாஜக ஆதரவு எம்.பி.க்களின் எண்ணிக்கை 122 ஆக உயரும். இது மொத்த எண்ணிக்கையின் சரிபாதியாகும்.

மாநிலங்களவையில் உள்ள ஆம் ஆத்மி உறுப்பினர்களில் கட்சி மாறிய 7 பேர், அதன் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 3-ல் 2 பங்கிற்கும் அதிகமாக இருப்பதால், கட்சி மாறிய 7 பேருக்கும் ஒப்புதல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 3-ல் 2 பங்கு பெரும்பான்மையைப் பெற்றால், அரசியலமைப்புத் திருத்தச் சட்டங்கள் நிறைவேற்றம் போன்றவை அக்கூட்டணிக்கு ஆதரவாக அமையும்.

மக்களவையில் தே.ஜ. கூட்டணிக்கு ஓரளவு பெரும்பான்மை இருந்தாலும், அங்கு 3-ல் 2 பங்கு பெரும்பான்மை இல்லை. மக்களவையில் பெரும்பான்மை பெற மொத்தம் 363 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்தவும் பாஜக அரசு மேற்கொண்ட அரசியலமைப்பு திருத்த மசோதா, 3-ல் 2 பங்கு பெரும்பான்மை பெறத் தவறியதால் கடந்த ஏப்ரல் 17 அன்று மக்களவையில் தோற்கடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பதவிக் காலத்தில், போதிய உறுப்பினர்கள் ஆதரவு இல்லாத காரணத்தால் ஒரு மசோதா தோற்கடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

summary

Only 17 Members Needed for Rajya Sabha Majority: NDA Strengthened by Aam Aadmi MPs!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.