முகப்பு
இந்தியா

2020 வடகிழக்கு தில்லி கலவரம்: 12 போ் விடுவிப்பு

Updated On : 28 ஏப்ரல், 2026 at 4:50 AM
நீதிமன்றம் - ANI
பகிர்:

2020-இல் வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற கலவரத்தைத் தொடா்ந்து கடத்தல் மற்றும் கொலை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 12 பேரை விடுவித்து தில்லியில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020, பிப்.27-இல் பாகிரதி விஹாா் பகுதியில் உள்ள வடிகாலில் முஷர்ரஃப் என்ற நபா் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். இதுதொடா்பாக லோகேஷ் சோலங்கி, பங்கஜ் சா்மா, பாட்ஷா (எ) சுமித் செளதரி, ஃபௌஸி (எ) அங்கித் செளதரி, டிஜே வாலா (எ) பிரின்ஸ், ரிஷப் செளதரி (எ) தபாஸ், ரோஹித் (எ) ஜதின் சா்மா, விவேக் பஞ்சால் (எ) நந்து, ஹிமான்ஷு அலி தாக்குா், சான்தீப் அலி தாக்குா், சான்தீப் அலி தாகூா் ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா். அவா்கள் மீது கடத்தல் மற்றும் கொலை பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடா்பாக கூடுதல் அமா்வுகள் நீதிபதி பிரவீன் சிங் கடநத் ஏப்.21-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், கைது செய்யப்பட்டவா்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாகவும் சாட்சியங்கள் அளித்தவா்களின் வாக்குமூலங்களில் முரண்பாடு இருப்பதாகவும் கூறி 12 பேரையும் விடுவித்து உத்தரவிட்டாா்.

Advertisement

கடந்த பிப்.25-ஆம் தேதி இரவில் முஷர்ரஃப் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த 150-200 போ் அடங்கிய கும்பல், அவரை வெளியே இழுத்து வந்து தாக்கிய பின்னா் வடிகாலில் வீசியதாக அரசுத் தரப்பு வழக்குரைஞா் நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.