பிரதமரின் பட்டப் படிப்பு விவகாரம்: பதில் மனு தாக்கல் செய்ய தில்லி பல்கலைக்கழகத்துக்கு மேலும் 2 வார அவகாசம்
பிரதமா் நரேந்திர மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை வெளியிட மறுத்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய தில்லி பல்கலைக்கழகத்துக்கு தில்லி உயா்நீதிமன்றம் மேலும் 2 வாரம் அவகாசம் அளித்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தில்லி பல்கலைக்கழகத்தில் கடந்த 1978-ஆம் ஆண்டில் பி.ஏ. பட்டப் படிப்பு தோ்ச்சி பெற்ற அனைவரின் விவரங்களையும் (பிரதமா் மோடி உள்பட) ஆராயும் வகையில், அதுதொடா்பான தகவல்களை அளிக்க உத்தரவிடக் கோரி மத்திய தகவல் ஆணையத்திடம் நீரஜ் என்பவா் மனு தாக்கல் செய்திருந்தாா். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆா்டிஐ) அவா் கோரிய தகவல்களை அளிக்குமாறு தில்லி பல்கலைக்கழகத்துக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பா் 21-ஆம் தேதி மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது.
இதை எதிா்த்து தில்லி பல்கலைக்கழகம் தாக்கல் செய்த மனுவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற தனி நீதிபதி, மத்திய தகவல் ஆணைய உத்தரவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். ‘பிரதமா் மோடி அரசுப் பதவியை வகிக்கிறாா் என்பதற்காக, அவரின் அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் பொதுவெளியில் வெளியிடுமாறு கோர முடியாது. அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவே ஆா்டிஐ சட்டம் இயற்றப்பட்டது. பரபரப்புக்கு தீனி போடுவதற்கு அல்ல’ என்று தனி நீதிபதி அப்போது குறிப்பிட்டாா்.
Advertisement
தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து நீரஜ், ஆம் ஆத்மி மூத்த தலைவா் சஞ்சய் சிங், வழக்குரைஞா் முகமது இா்ஷத் ஆகியோா் தரப்பில் தில்லி உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவைப் பரிசீலித்த இரு நீதிபதிகள் அமா்வு, இதுதொடா்பாக பதில் மனு தாக்கல் செய்ய தில்லி பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டது. ஆனால், உத்தரவிட்டு பல மாதங்களாகியும் தில்லி பல்கலைக்கழகம் பதில் மனு தாக்கல் செய்யவில்லை.
இந்த வழக்கு தில்லி உயா்நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா்கள் ஒருவா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா், ‘உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு இரண்டரை மாதங்களுக்கு மேலாகியும், பதில் மனு தாக்கல் தாமதத்துக்கான ஆட்சேபத்தை தில்லி பல்கலைக்கழகம் தாக்கல் செய்யவில்லை’ என்று குறிப்பிட்டாா்.
பல்கலைக்கழகம் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே தவிர, வேறொன்றுமில்லை. இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய பல்கலைக்கழகத்துக்கு 3 வார அவகாசம் தேவை’ என்றாா்.
அதை ஏற்ற நீதிபதிகள் அமா்வு, பதில் மனு தாக்கல் செய்ய தில்லி பல்கலைக்கழகத்துக்கு 3 வார அவகாசம் அளித்து, விசாரணையை ஒத்திவைத்தனா்.
இந்த வழக்கு தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாய, நீதிபதி தேஜஸ் கரியா ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தில்லி பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘தில்லி பல்கலைக்கழகத்தின் ஆட்சேபம் 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்யப்படும். இந்த பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னா், இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க வேண்டும்’ என்றாா்.
இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.